சி.ஜே.பி. போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த பாஜக முயற்சி? – அபிஜித் திப்கே குற்றச்சாட்டு
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டத்தில் வெளிநபர்களை அனுப்பி திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஒரு மாதமாக நாங்கள் அமைதியான முறையில் இங்கு போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த ஒரு மாத காலத்தில் இதுபோன்ற எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. ஆனால், போராட்டம் தீவிரமடைந்த பிறகு, அதை சீர்குலைக்க வெளியில் இருந்து ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், “போராட்டக்காரர்களைத் தூண்டிவிடும் நோக்கில் பாஜக ஆதரவாளர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்கள்தான் கற்களை வீசி வன்முறையை ஏற்படுத்துகிறார்கள். காவல்துறையே லாரிகளில் கற்களை கொண்டு வருகிறது. பின்னர் பாஜக ஆதரவாளர்கள் அவற்றை வீசி, அந்தப் பழியை சி.ஜே.பி. போராட்டக்காரர்கள் மீது சுமத்த முயற்சிக்கின்றனர்” என்றும் அபிஜித் திப்கே குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாஜக அல்லது காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை. டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடைபெற்று வரும் சி.ஜே.பி. போராட்டம் தொடர்ந்து அரசியல் கவனத்தை ஈர்த்து வருகிறது.
