நீட் எதிர்ப்பு போராட்டம்: “இந்திய மாணவர்களுடன் கைகோர்த்து நிற்கிறேன்” – இயக்குநர் மாரி செல்வராஜ்
நீட் (NEET) தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
அவரது பதிவில், “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் எத்திசையில் இருந்து ஒலித்தாலும், அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நீட் எனும் ஆணவப்போக்கிற்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகள், தேர்வு நிர்வாகம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
கல்வி, மாணவர் உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், அவரது கருத்தும் பொதுவெளியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
