“தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா பதிவு
Politics

“தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா பதிவு

Jul 25, 2026

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஜோதிகா சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா செய்யுங்கள்” என்று வலியுறுத்தியுள்ள அவர், மாணவர்களுடனும் நாட்டின் எதிர்காலத்துடனும் நிற்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் மாணவர்களுடனும், நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் பொறுப்புணர்ச்சியுடன் நிற்கிறேன். ஜனநாயக இந்தியாவிற்காகவும், சீர்திருத்தமான கல்வி அமைப்பிற்காகவும் குரல் கொடுக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய இளைஞர் தலைமுறையைப் பாராட்டிய ஜோதிகா, “தடையின்றி வெளிப்படையாக குரல் கொடுக்கும் Gen Z தலைமுறையினரே, உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், CJP அமைப்பின் அபிஜீத் திப்கே மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரைக் குறிப்பிட்டு, “தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல வளர்க்க விரும்புகிறோம். எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி” என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடரும் நிலையில், நடிகை ஜோதிகாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்று வருகிறது. அதே நேரத்தில், அவரது கருத்துகள் குறித்து பல்வேறு தரப்பினரும் ஆதரவும் விமர்சனங்களும் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *