ரூ.3,000 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் பாரத் ரயில் நிலையங்கள் இன்று திறப்பு; சென்னை பூங்கா நிலையத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் சுமார் ரூ.3,000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் பாரத் ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த ரயில் நிலையங்கள், பயணிகளுக்கான நவீன வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற அணுகுமுறை, மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அரங்குகள், டிஜிட்டல் தகவல் அமைப்புகள், சுத்தமான நடைமேடைகள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட கட்டமைப்புகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலும் பல முக்கிய ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சென்னை பூங்கா (Park) ரயில் நிலையமும் இன்று அதிகாரப்பூர்வமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
Amrit Bharat Station Scheme திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு இணையாக மாற்றும் பணிகள் கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த 75 ரயில் நிலையங்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் பல மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்கின்றனர்.
