கல்வி அமைச்சராக சோனம் வாங்சுக்? – கெஜ்ரிவால் வலியுறுத்தல்
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்கி, அவரது இடத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வி சீர்திருத்த ஆதரவாளருமான சோனம் வாங்சுக்கை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட கெஜ்ரிவால், நாட்டின் கல்வி அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை திறம்பட கையாளக்கூடியவர் சோனம் வாங்சுக் என்றும், கல்வித் துறைக்கு புதிய திசையை வழங்கும் திறன் அவருக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janata Party – CJP) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதையும், கல்வி அமைப்பில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம் தொடர்ந்து 19-வது நாளை எட்டியுள்ள நிலையில், கெஜ்ரிவாலின் இந்த கருத்து தேசிய அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்விக் கொள்கை, தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வி நிர்வாகம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் சூழலில், இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
