கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! மகள் மீதான வழக்கில் பாய்ந்தது ED!
National

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! மகள் மீதான வழக்கில் பாய்ந்தது ED!

May 27, 2026

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் வீடுகளில் அமலாக்கத்துறை (ED) இன்று அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், கேரள முன்னாள் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் என்பவரின் கோழிக்கோடு இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மகள் வீணா மீதான SFIO குற்றப்பத்திரிகை பின்னணி!

பினராயி விஜயனின் மகள் டி. வீணாவுக்குச் சொந்தமான ஐடி (IT) நிறுவனம் எக்சாலஜிக் சொல்யூஷன்ஸ் (Exalogic Solutions) ஆகும். இந்த நிறுவனம் கொச்சியைச் சேர்ந்த சிஎம்ஆர்எல் (CMRL) என்ற கனிம நிறுவனத்திடம் இருந்து சட்டவிரோதமாகப் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக மத்திய அரசின் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO) கடந்த ஏப்ரல் மாதம் ஒரு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அந்த வழக்கின் தொடர்ச்சியாகவே தற்போது இந்த புதிய அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தேர்தல் தோல்வியும், அடுத்தடுத்த சோதனைகளும்:

கேரளாவில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) தோல்வியடைந்தது. ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆட்சியைப் பிடித்தது.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பினராயி விஜயன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவியில் இருந்து விலகிய ஒரே மாதத்திற்குள் இந்த அதிரடி சோதனைகள் நடந்துள்ளன.

சேவை தராமல் கோடி கணக்கில் லஞ்சம்?

இந்த வழக்கின் முக்கிய விவரங்கள் இதோ:

  • 2017-ல் வீணாவின் எக்சாலஜிக் நிறுவனம் மென்பொருள் மற்றும் சந்தைப்படுத்தல் சேவைகளுக்காக சிஎம்ஆர்எல் (CMRL) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.
  • ஆனால், எந்தவொரு சேவையையும் வழங்காமல் 2018-19 முதல் மூன்று ஆண்டுகளுக்கு அந்த நிறுவனம் ‘சட்டவிரோத கட்டணங்களை’ பெற்றுள்ளது.
  • இது தொடர்பாக 2019-ல் வருமான வரித்துறை சிஎம்ஆர்எல் வளாகத்தில் சோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது.
  • இதன் அடிப்படையில், 2024 ஜனவரியில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் SFIO விசாரணைக்கு உத்தரவிட்டது.
  • தொடர்ந்து, 2024 மார்ச் மாதத்தில் அமலாக்கத்துறை (ED) இந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கைப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் சிஎம்ஆர்எல் நிறுவனத்தில் 13.4 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ள கேரள மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகமும் (KSIDC) விசாரிக்கப்பட்டு வருகிறது. கேரளாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் வீட்டில் அதிகாலையிலேயே அமலாக்கத்துறை நுழைந்தது அம்மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *