“மாநில உரிமைகளைக் கைவிடுவதா?” தவெக அமைச்சர் விஸ்வநாதனின் கருத்துக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கடும் கண்டனம்!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக கூட்டணி அரசுக்கும், விசிக-விற்கும் இடையே பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில் புதிய மோதல் வெடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று முந்தைய திமுக அரசு சட்டம் இயற்றியது.
ஆனால், “முந்தைய அரசின் அந்த நிலைப்பாட்டைத் தவெக அரசு பின்பற்ற வேண்டியதில்லை” என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறினார். அமைச்சரின் இந்த கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
“இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல்!”
அமைச்சரின் பேட்டி குறித்து விசிக எம்.பி. ரவிக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவின் விவரம் வருமாறு:
“பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நீண்ட காலக் கோரிக்கை ஆகும். முந்தைய அரசின் அந்த நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இது மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது போன்றதாகும். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக அதிகார வரம்பு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பையும் இது நேரடியாக அவமதிப்பதாகும்.”
முதலமைச்சர் விஜய்க்கு விசிக நேரடிக் கேள்வி!
அமைச்சரின் இந்த தன்னிச்சையான அறிவிப்புக்கு தவெக மேல்மட்டம் ஒப்புதல் அளித்துள்ளதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். “மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த முக்கிய முடிவை முதல்வர் விஜய்யின் ஒப்புதலோடுதான் சொல்கிறாரா? அல்லது அவரது சொந்தக் கருத்தா?” என்று ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
“பல்கலைக்கழகங்களின் வேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சர் விஜய் தான் இறுதி முடிவு எடுப்பார்” என்று அமைச்சர் விஸ்வநாதன் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். தவெக அமைச்சரவையில் விசிக-விற்குத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அதிருப்தி நிலவி வரும் வேளையில், இந்த புதிய விவகாரம் கூட்டணிக்குள் மேலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது
