CJP போராட்டம்: ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு திமுக கண்டனம்
தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட் (NEET) தேர்வு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) மற்றும் மாணவர்கள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் டெல்லியில் மிகப் பெரிய இளைஞர்கள் போராட்டமாக மாறியுள்ள இந்தப் போராட்டத்தை கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள சேவை முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கல்விக்காக போராடும் மாணவர்களின் உரிமைக் குரலை ஒடுக்குவதற்கு பதிலாக, அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்தக் கட்சி தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அதேபோல், அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவோரை அடக்குமுறையால் நிரந்தரமாக மௌனமாக்க முடியாது என்றும், ஜனநாயகத்தில் அமைதியான போராட்டம் நடத்தும் உரிமையை அரசு மதிக்க வேண்டும் என்றும் திமுக தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் தேசிய அரசியல் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், மாணவர் அமைப்புகள், எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தொடர்ந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் முக்கிய விவாதமாக உருவெடுக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
