“பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்?” – மாணவர் போராட்டம் குறித்து ராகுல் காந்தி கேள்வி
நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தை கேள்விக்குள்ளாக்கி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறையை “கரையான் அரிப்பதுபோல்” சீரழித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு மத்திய அரசு இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று மாணவர்கள் மீது நடைபெற்ற காவல்துறை நடவடிக்கையை குறிப்பிட்ட ராகுல் காந்தி, அமைதியான முறையில் போராடிய மாணவர்களை தாக்கிய சம்பவம் ஏற்க முடியாதது என்றும் கூறினார். இந்த சம்பவத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஜனநாயக நாட்டில் மாணவர்களின் குரலை அடக்குவதற்காக பலவந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், மாணவர்களை அடித்துத் துன்புறுத்தும் அநாகரிகமான செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு வழங்கப்படும் பதில் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
