தமிழகம் முழுவதும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்? – கோழி வணிகர்கள் அதிரடி முடிவு
தமிழகம் முழுவதும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனையை நிறுத்த தமிழ்நாடு கோழி வணிகர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தஞ்சையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது, கோழி உற்பத்தியாளர்கள் விற்பனைக்கு அனுப்பும் முன் கோழிகளுக்கு கழுத்து வரை தீவனம் அளித்து அனுப்புவதால், அவற்றின் கழிவுகள் இறைச்சியில் கலக்கும் நிலை ஏற்படுகிறது. இது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பாக கடுமையான கவலைகளை உருவாக்குவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அரசு வகுத்துள்ள தீவனக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கோழி உற்பத்தியாளர்கள் முறையாக பின்பற்றவில்லை என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தின் காரணமாக உணவகங்கள், கோழி விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதை ஒப்புக்கொண்ட கூட்டமைப்பு, “இதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை” என விளக்கம் அளித்துள்ளது.
கோழி விற்பனை நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு மாநிலம் முழுவதும் கோழி சந்தை, உணவகத் தொழில் மற்றும் நுகர்வோர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
