நுழைவுத் தேர்வுகளில் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு
நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளின் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில், தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தற்போதைய சூழலில் நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளின் எதிர்கால நடைமுறைகள் குறித்து விரிவாக சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்வு முறைமைகள் முழுமையான நம்பகத்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்றும், அனைத்து தேர்வு செயல்முறைகளிலும் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார்.
இந்த நோக்கத்திற்காக, இன்போசிஸ் இணை நிறுவனரும் ஆதார் திட்டத்தின் முதல் தலைவருமான நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்தக் குழு, நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் தேவையான சீர்திருத்தங்களை ஆய்வு செய்து விரிவான பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கும்.
குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
நந்தன் நிலேகனி தலைமையிலான இந்த உயர்நிலைக் குழுவில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத், சென்னை ஐஐடி இயக்குநர் வீ. காமகோடி, இந்திய உளவுத் துறையின் முன்னாள் இயக்குநர் தபன் டேகா, கல்வித் துறை முன்னாள் செயலர் அனிதா கர்வால் மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அம்ரித் லால் மீனா உள்ளிட்டோர் இடம்பெற உள்ளனர்.
நுழைவுத் தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் இந்தக் குழுவின் பரிந்துரைகள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
