விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது: த.வெ.க. அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
Politics

விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது: த.வெ.க. அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

Jul 20, 2026

சென்னை: விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் பண்புகள் இல்லாமல் செயல்படும் த.வெ.க. அரசு, அரசியல் எதிர்ப்புகளை ஒடுக்குவதற்காக கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியில் நடைபெறும் தவறுகள் மற்றும் அவலங்களை சுட்டிக்காட்டும் திமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இணைய ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் தொடர்ந்து குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவதூறு வழக்குகளில் கூட தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்ப்பது குறித்து நீதிமன்றம் சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மீண்டும் அதேபோன்ற நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள மார்க்கண்டேயனுக்கு தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கைது செய்யப்பட்ட ஒருவரின் அடிப்படை சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும் மறுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஆட்சியாளர்களின் சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றுவது காவல்துறையின் பணி அல்ல என்றும், சட்டத்திற்கும் மனசாட்சிக்கும் இணங்க செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் உடனடி கைது நடவடிக்கை எடுக்கும் அரசு, பிற முக்கிய குற்றச்சாட்டுகளில் ஏன் அதே வேகத்தை காட்டவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *