உலக சதுரங்க நாள்: இளம் வீரர்களுக்கு அரசு முழு ஆதரவு வழங்கும் – முதல்வர் விஜய்
சென்னை: உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்க வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு உருவெடுத்து வரும் நிலையில், இளம் தலைமுறையினர் சர்வதேச போட்டிகளில் சாதித்து தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், 1988-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, உலக சாம்பியன் டி. குகேஷ், கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, கிராண்ட் மாஸ்டர் வைஷாலி உள்ளிட்ட பலர் சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பாராட்டினார்.
உலக சதுரங்கத்தின் முக்கிய மையமாக தமிழ்நாடு தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், இளம் தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களை கற்றுத்தேர்ந்து உலகளாவிய போட்டிகளில் பங்கேற்று மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்.
மேலும், சதுரங்க திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு அனைத்து வகையிலும் துணைநின்று தேவையான உதவிகளை வழங்கும் என்றும், திறமையான வீரர்களை உருவாக்கும் முயற்சிகளுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
