அதிமுகவில் அதிரடி சமரசம்! எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றக் குழு தலைவராக்க சபாநாயகரிடம் கடிதம்!
Politics

அதிமுகவில் அதிரடி சமரசம்! எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றக் குழு தலைவராக்க சபாநாயகரிடம் கடிதம்!

May 27, 2026

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி மோதல்கள் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளன. தனியாகச் செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி அணியினர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியுடன் இணைந்துள்ளனர். இரு அணிகளும் ஒன்றுபட்டதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக்கச் சபாநாயகரிடம் கூட்டாகக் கடிதம் அளித்துள்ளனர்.

இரண்டு அணிகளாகப் பிரிந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மொத்தம் 47 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவளிக்க முடிவு செய்தனர்.

மறுபுறம் 22 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நின்றனர். சட்டமன்றக் குழு தலைவராக வேலுமணியை நியமிக்க ஒரு தரப்பும், பழனிசாமியை நியமிக்க மற்றொரு தரப்பும் சபாநாயகரிடம் தனித்தனியாக மனு அளித்து வந்தனர்.

பழனிசாமியின் அதிரடி நடவடிக்கையும், ரத்து முடிவும்

அதிமுக-வின் இந்த உள்விவகாரம் காரணமாகப் போர்க்கொடி தூக்கிய 25 எம்.எல்.ஏ-க்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும் அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் தயாரானார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், வேலுமணி அணியில் இருந்த 4 முக்கிய எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை திடீரென ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்தனர். இதனால் எஞ்சிய எம்.எல்.ஏ-க்களைக் தக்க வைக்க இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் இறங்கின.

சபாநாயகரிடம் புதிய கடிதம்: சி.வி.சண்முகம் அதிருப்தி?

நேற்று நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பழனிசாமியுடன் தூது சென்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று எஸ்.பி.வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரடியாகச் சந்தித்துப் பேசினர். இதன் மூலம் இருதரப்பு குழப்பமும் முடிவுக்கு வந்தது.

அதிமுக-வின் இரு அணிகளுக்குள்ளும் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கூட்டாகத் தலைமைச் செயலகம் சென்றனர். வேலுமணியைத் தலைவராக்கக் கோரிய பழைய மனுவைத் திரும்பப் பெற்றனர். அதேபோல் வேலுமணி அணியைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி பழனிசாமி அளித்த கடிதமும் திரும்பப் பெறப்பட்டது.

இதன்பின்னர் பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியைக் கொறடாவாகவும் (Whip) நியமிக்கக் கோரி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் புதிய கடிதம் அளிக்கப்பட்டது. இந்த முக்கிய சந்திப்புகளில் சி.வி.சண்முகம் மட்டும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *