மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு இன்று தொடக்கம்; ஜூலை 31 வரை ஆன்லைனில் விவரங்கள் பதிவு செய்யலாம்
தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று (ஜூலை 17) முதல் தொடங்கியுள்ளது. இந்த கட்டத்தில், பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான விவரங்களை ஆன்லைன் மூலம் சுயமாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சுய கணக்கெடுப்பு ஜூலை 31 வரை நடைபெறுகிறது. இணையதளத்தின் மூலம் குடும்பத்தினர், வீட்டு அமைப்பு, குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட வீட்டு வசதிகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் நேரடியாக பதிவேற்றலாம்.
இந்த முதற்கட்ட கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தகவல்கள், நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கான அடிப்படை தரவாக பயன்படுத்தப்படவுள்ளன.
ஆன்லைனில் பதிவு செய்ய முடியாதவர்களிடம், அடுத்த கட்டத்தில் கணக்கெடுப்பு அலுவலர்கள் நேரடியாக வீடு தோறும் சென்று தகவல்களை சேகரிப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொகை மற்றும் வீட்டு வசதிகள் குறித்த துல்லியமான தகவல்களை வழங்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
