CBSE-யின் ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) குளறுபடிகள்! யாருக்காக இந்த டிஜிட்டல் வெற்றிக் கதைகள்? அம்பலமாகும் பின்னணி!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடப்பு ஆண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்காகப் புதிய ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) என்ற டிஜிட்டல் விடைத்தாள் திருத்தும் முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த புதிய முறையில் விடைத்தாள் பக்கங்கள் காணாமல் போனது மற்றும் மதிப்பெண் குளறுபடிகள் எனப் பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன.
இதனால் லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் பள்ளி முதல்வர்கள் பலர் இந்த புதிய முறையைப் பாராட்டித் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வினோதமான முரண்பாடு தற்போது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
குளறுபடிகளுக்கு நடுவே எழும் ‘வெற்றிக் கதை’ விளம்பரங்கள்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசியத் தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள வேளையில், சிபிஎஸ்இ-யின் இந்த குளறுபடியும் தேசிய அளவில் விவாதமாகியுள்ளது. விடைத்தாள் திருத்தலில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது, பள்ளி முதல்வர்கள் ஏன் திடீரென இதற்கு ஆதரவாகப் பேச வேண்டும்?
இதன் பின்னணியில் உள்ள ‘நரேட்டிவ்’ (Narrative) அரசியலால் யாருக்கு என்ன லாபம்?
- CBSE வாரியம்: ஒரு புதிய சீர்திருத்தம் வெற்றிகரமாக முடிந்தது எனக் காட்டினால், பொதுமக்களின் கடுமையான விமர்சனங்களில் இருந்து வாரியம் எளிதாகத் தப்பித்துக் கொள்ள முடியும்.
- பள்ளி நிர்வாகங்கள்: புதிய டிஜிட்டல் முறைக்காகப் பெருமளவு பணத்தையும், நேரத்தையும் முதலீடு செய்துள்ளதால், தங்களது நற்பெயரைக் காக்க அவர்கள் இதை ஆதரிக்கின்றனர்.
- தொழில்நுட்ப நிறுவனங்கள்: இந்த டிஜிட்டல் டெண்டரைப் பெற்றுள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘கோயம்ப்ட் எடுடெக்’ (Coempt Eduteck) போன்ற தனியார் நிறுவனங்களின் வணிகம் பாதிக்கப்படாமல் இருக்கும்.
“இந்த ஆண்டு அமலுக்கு வர வேண்டிய திட்டமே இல்லை!”
பள்ளி முதல்வர்கள் தன்னிச்சையாகப் பேசுகிறார்களா அல்லது சிபிஎஸ்இ வாரியத்தின் வற்புறுத்தலால் பேசுகிறார்களா? என்று இந்தியா டுடே டிஜிட்டல் (India Today Digital) குழுவினர் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் கள ஆய்வு நடத்தினர். வாரியத்திடமிருந்து அதிகாரப்பூர்வ உத்தரவுகள் எதுவும் பள்ளிகளுக்குச் செல்லவில்லை என்பது அதில் தெரியவந்தது.
இருப்பினும், மும்பையைச் சேர்ந்த அரசுப் பள்ளி முதல்வர் ஒருவர் பேசுகையில், “கொரோனா காலத்தில் 9-ஆம் வகுப்புக்காக இந்த திட்டத்தை வாரியம் சோதித்துப் பார்த்தது. அப்போது பல தொழில்நுட்பக் கோளாறுகள் (Glitches) ஏற்பட்டதால் திட்டம் கைவிடப்பட்டது.
உண்மையில், 2026-ஆம் ஆண்டில் இந்த திட்டம் அமலுக்கு வர வேண்டியதே இல்லை. எவ்வித முன் தயாரிப்பும் இன்றி திடீரென அமல்படுத்தியதால் ஆசிரியர்கள் கடும் திணறலுக்கு உள்ளாகினர்” என்று ரகசிய உடைத்துள்ளார்.
சர்வர் முடக்கம்; முடிவுகளை மாற்றிய அரசியல் கருவி!
கடந்த மே 13 அன்று பிளஸ் 2 முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, ஆசிரியர்கள் பலர் இந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏப்ரல் மாத மதிப்பீட்டின் போது சர்வர் முடக்கம் (Server Slowdown), லாகின் பிரச்சினைகள் மற்றும் விடைத்தாள்கள் திரையில் தோன்றுவதில் தாமதம் போன்ற பல தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
“எங்களது மதிப்பெண்களும், எதிர்காலமும் அதிகாரிகளின் அரசியல் விளையாட்டுக் கருவியாக மாறிவிட்டன” என்று டெல்லியைச் சேர்ந்த சுவயம் மொஹந்தி என்ற மாணவர் வேதனை தெரிவித்துள்ளார். உயர்கல்விச் சேர்க்கை மற்றும் கல்வி உதவித்தொகைகளைத் தீர்மானிக்கும் இந்த முக்கியத் தேர்வில், சிபிஎஸ்இ வாரியம் தங்களது பிழைகளை மறைக்கப் பார்க்கும் இத்தகைய மலிவான விளம்பர உத்திகளை நிறுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
