உரிமைக்குரல் என்றால் என்ன தெரியுமா? ஒப்பாரி என்றால் என்ன என்பது புரிகிறதா? மோடியை கடுமையாக விமர்சித்த திமுகவின் முரசொலி!
Tamilnadu

உரிமைக்குரல் என்றால் என்ன தெரியுமா? ஒப்பாரி என்றால் என்ன என்பது புரிகிறதா? மோடியை கடுமையாக விமர்சித்த திமுகவின் முரசொலி!

Apr 10, 2025

சென்னை: தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலுக்கும் ஒப்பாரிக் குரலுக்கும் வித்தியாசம் தெரியாமல், எவ்வளவு நிதி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் சிலர் அழுது கொண்டே இருப்பதாக’ பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு திமுகவின் நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.

முரசொலி நாளேட்டில் நேற்று எழுதப்பட்ட தலையங்கம்: ‘எவ்வளவு கொடுத்தாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்’ என்று புலம்பி இருக்கிறார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. ‘எவ்வளவு கொடுத்தாலும்…’ என்று சொல்லும் அவர் எவ்வளவுகொடுத்தோம் என்பதைப் பட்டியல் போட்டிருந்தால் பாராட்டலாம். எதுவும் கொடுக்காத நிலையில் அவரால் எப்படி பட்டியல் போட முடியும்? தமிழ்நாடு எழுப்புவது அழுகை அல்ல, உரிமை. உரிமைக் குரலுக்கும் ஒப்பாரிக்கும் வேறுபாடு தெரியாதவர் இந்திய நாட்டின் பிரதமராக அமர்ந்திருப்பது இந்தியாவுக்குத் தலைகுனிவு ஆகும்.

இயற்கை பேரிடர் நிதி எவ்வளவு?

மூன்று இயற்கை பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது. மாநில அரசு கோரிய 37,986 கோடி ரூபாய். இதில் எவ்வளவு நிதியைக் கொடுத்துள்ளேன் என்று பிரதமர் சொன்னாரா? இல்லை!

பள்ளி கல்வி நிதி

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கான நிதியான ரூ.2152 கோடியைக் கொடுத்துவிட்டேன் என்று பிரதமர் சொன்னாரா? இல்லை! சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்காகரூ.60 ஆயிரம் கோடியில் பாதியைக் கொடுத்து விட்டேன் என்று சொன்னாரா பிரதமர்? இல்லை! தமிழ்நாடு வரியாகக் கொடுப்பதில் பாதிக்கும் மேல் தமிழ்நாட்டுக்கு தந்துவிட்டேன் என்று சொன்னாரா பிரதமர்? இல்லை!
மதுரை எய்ம்ஸ்

தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தேன், வாருங்கள் அந்த கம்பீரமான கட்டடத்தைக் காட்டுகிறேன் என்று அழைத்தாரா பிரதமர்? இல்லை. வாயால் வடை சுடுவதா? எந்தச் சாதனையையும் சொல்லாமல், ‘மூன்று மடங்கு கொடுத்தோம்’, ‘ஏழு மடங்கு கொடுத்தோம்’, ‘பத்து மடங்கு கொடுத்தோம்’ என்று வாயால் வடை சுட்டுவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர்.

மத்திய அரசுக்கும் நிதி தரும் தமிழகம்

மத்திய அரசின் சார்பில் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசுதான் நிதி அளித்து வருகிறது. எத்தனையோ லட்சம் பேருக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததாக பிரதமர் சொல்லி இருக்கிறார். ஒன்றிய அரசு வீடுதோறும் குடிநீர் (Ja1 Jeevan Mission) என்ற திட்டத்தை வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்வழங்கவேண்டிய 4,142 கோடி ரூபாயில், 732 கோடிரூபாயை மட்டுமே வழங்கியுள்ளது. நிதியின்மையினால் திட்டங்களின் செயல்பாடு சுணங்கக் கூடாது என்பதால் தமிழ்நாடு அரசு நிதியை கொடுத்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறதுஎன்பது பிரதமருக்குத் தெரியுமா?

வீடு கட்டித் தரும் திட்டம் நிதி யாருடையது?

மத்திய அரசின் சார்பில் வீடு கட்டித் தருவதாக பிரதமர் சொல்லி இருக்கிறார். மத்திய அரசின் திட்டமான பிரதமர் நகர்ப்புர வீட்டுவசதித் திட்டத்தின் (PMAY-U), கீழ் வழங்கப்படும் மானியத் தொகையானது, 2816 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, 1.5 இலட்சம் ரூபாயாகவே இருக்கிறது. இத்திட்டத்தினைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசானது, வீடுஒன்றிற்கு 12 முதல் 14 இலட்சம் ரூபாயை தன் சொந்த நிதியின் மூலம் மானியமாகக் கொடுத்து, ஏழ்மை நிலை- யில் இருக்கும் மக்களின் சொந்தவீட்டிற்கான கனவினை நிறைவேற்றி யுள்ளது. இதனை பிரதமர் அறிவாரா?

வீட்டு வசதி திட்ட மானியம்

மத்திய அரசின் பிரதமர் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் (PMAY- G) கீழ் வழங்கப்படும் மானியத் தொகையானது, வீடு ஒன்றிற்கு 0.72 இலட்சம் ரூபாயாக, எட்டு வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு, வீடு ஒன்றிற்கு 1.72 இலட்சம் ரூபாயை மானியமாக வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், மாநில அரசின் மானியமானது 3.53 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இது, ஒன்றிய அரசு தன்னுடைய திட்டத்திற்கு வழங்கும் மானியத்துடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகம். இதனை பிரதமர் அறிவாரா?

சட்டை என்னுடையது காமெடிதான்

திட்டம் தான், மத்திய அரசின் திட்டம். ஆனால் அதற்கும் நிதி தருவது தமிழ்நாடு அரசு. ‘அவருக்குத் தான் கல்யாணம், ஆனால் சட்டை என்னுடையது’ என்பது போல ‘செந்தில் காமெடி’யோடு ஆட்சி நடத்துவது யார்?

அழுகையா? உரிமையா? எச்சரிக்கையா?

‘ இந்த திட்டத்தில் கையெழுத்துப் போட்டால் தான் இரண்டாயிரம் கோடி பணம் கிடைக்கும் என்றாலும் – பத்தாயிரம் கோடி பணம் கிடைக்கும் என்றாலும் போட மாட்டோம் . இரண்டாயிரம் கோடி பணத்துக்காக இன்று கையெழுத்துப் போட்டால் – இரண்டாயிரம் ஆண்டு பின்னோக்கி இந்த தமிழ்ச் சமுதாயம் போய்விடும். அந்தப் பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்ய மாட்டான்” என்று சொன்னார். இந்தியாவில் இப்படி எந்த முதலமைச்சரும் பேசி இருக்க மாட்டார்கள். இது அழுகையா? உரிமையா? பிரதமருக்குச் செய்யப்பட்ட எச்சரிக்கை அல்லவா இது? இது கூடப் புரியவில்லையா?

திட்டங்களை முடக்கும் மத்திய அரசு

தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசானது, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை விதித்து, அத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிரமங்களை உண்டாக்குவதோடு மட்டு- மல்லாமல், அத்திட்டங்கள் முடங்கும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இதைச் செய்யாதீர்கள் என்று சொல்வது உரிமையா? அழுகையா?

வள்ளுவர் சொன்னதும் கலைஞர் தந்ததும்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளுவர் சொன்னார். அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை- என்றார். இதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய விளக்கம்… கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர்,… ஆட்சியை அழிக்கும் படைக்கருவி – என்பது ஆகும். இதனை இந்தியில் மொழி பெயர்த்து பிரதமர் அறிந்து கொள்ளட்டும். இவ்வாறு முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பேசியது என்ன?

ராமேஸ்வரம் பாம்பன் பால திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், இன்று ராம நவமி பண்டிகை. இப்போது சற்று முன்பு, சூரியனின் கதிர்கள் அயோத்தியில் உள்ள பிரமாண்டமான ராமர் கோயிலில் குழந்தை ராமரின் மீது விழுந்தன. பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை, நல்லாட்சிக்கு உத்வேகம் அளிக்கும். அது தேச நிர்மாணத்திற்கு ஒரு பெரிய அடித்தளமாகும். இன்று ராம நவமி. என்னுடன் சொல்லுங்கள். ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்! தமிழ்நாட்டின் சங்க இலக்கியங்களிலும் ஸ்ரீராமர் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்தப் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்திலிருந்து நாட்டுமக்கள் அனைவருக்கும் ராமநவமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ராமநாதசுவாமி கோவிலில் வழிபட முடிந்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த சிறப்பான நாளில், 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் தமிழ்நாட்டில் போக்குவரத்தை மேம்படுத்தும். இந்தத் திட்டங்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனாலும் தமிழ்நாடில் போதுமான நிதி தரவில்லை என சிலர் அழுகின்றனர். அவர்கள் அழுது கொண்டே இருக்கட்டும். முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தைவிட கூடுதல் நிதி கொடுத்துள்ளோம் என்றார்.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *