திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்-உதயநிதி ஸ்டாலின்
நீட் (NEET) தேர்வு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், NEET தேர்வு முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தி இந்து (The Hindu) நாளிதழில் மு.க.ஸ்டாலின் எழுதிய கட்டுரை, “NEET தேர்வில் மட்டுமல்ல, NEET தேர்வே ஒரு மோசடி” என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏழை, எளிய, கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவுகளைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத் தேர்வுகளின் உண்மையான நோக்கம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த தடைகளை உடைத்து சமூகநீதியை நிலைநாட்டும் போராட்டத்தில் திமுக எப்போதும் முன்னணியில் இருக்கும் என்றும், “அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்” என்று உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
NEET தேர்வு தொடர்பாக நாடு முழுவதும் அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுக தொடர்ந்து தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிவு மீண்டும் NEET விவகாரத்தை அரசியல் களத்தில் பேசுபொருளாக்கியுள்ளது.
