70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க கொள்கை: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
National

70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க கொள்கை: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Jul 17, 2026

உச்ச நீதிமன்றம் முக்கியமான மனிதாபிமான உத்தரவை பிறப்பித்துள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் மற்றும் குணப்படுத்த முடியாத தீராத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான ஒருங்கிணைந்த கொள்கையை மூன்று மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு விசாரித்தது. கருணை அடிப்படையில் வயதான மற்றும் தீவிர உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்படும் கைதிகளை விடுதலை செய்வதற்கான நாடு தழுவிய வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், மாநில அரசுகளுக்கு விரிவான வழிமுறைகளை வழங்கியுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாநில அரசும் மாநில சட்டப் பணிகள் ஆணையத்துடன் இணைந்து, விடுதலைக்கு தகுதியான கைதிகளை அடையாளம் காணும் தெளிவான கொள்கையை மூன்று மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், “குணப்படுத்த முடியாத தீராத நோய்” என்ற வரையறையை ஐக்கிய நாடுகள் சபையின் மருத்துவ வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒரே மாதிரியாக நிர்ணயிக்க வேண்டும் என்றும், கைதிகளின் உடல்நிலையை பாரபட்சமின்றி ஆய்வு செய்ய மாவட்ட மற்றும் மாநில அளவில் சுயாதீன மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே விடுதலை கோரும் விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்றும், விண்ணப்பம் பெறப்பட்ட நாள் முதல் மருத்துவக் குழுவின் பரிந்துரை மற்றும் இறுதி முடிவு வரை அனைத்து விவரங்களும் ‘இ-பிரிசன்ஸ்’ (e-Prisons) இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக, இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 19 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு, வயதான மற்றும் தீவிர உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட கைதிகளின் மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான நீதித்துறை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *