முதலமைச்சர் விஜய் கவனத்துக்கு… சாமானிய மக்களின் அசாதாரண 7 கேள்விகள்!
சென்னை | மே 27, 2026
“நாங்களே மாற்று!” என்று தவெக தலைவர் விஜய் அளித்த வாக்குறுதிகளுக்காக, தமிழக ஆட்சி அதிகாரத்தின் சுகமான சுமையைத் தூக்கி வைத்தவர்கள் சாமானிய மக்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 15 நாட்களிலேயே, தவெக அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தரப்பிலிருந்து அடுக்கடுக்கான கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தன்பக்கம் இழுப்பதில் காட்டும் அதே தீவிரத்தை, மக்கள் நலனிலும் முதல்வர் காட்ட வேண்டும் என எழும் அந்த 7 கேள்விகள்:
1. சட்டம் – ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு: ‘ஸ்டிக்கர்’ மாற்றமா?
கேள்வி: முந்தைய ஆட்சியில் பெண்களுக்கென்று இருந்த ‘பிங்க் பேட்ரோல்’ (Pink Patrol) வாகனத் திட்டத்திற்கு, தவெக அரசு ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ என்று பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதாக விமர்சனங்கள் எழுகிறதே, பெண்களின் பாதுகாப்பிற்கு ஆக்கபூர்வமான திட்டம் என்ன?
- கள நிலவரம்: தவெக அரசு பொறுப்பேற்ற 15 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ‘தெறி’ பட பாணியில் உடனடி நீதி கிடைக்கும் என நம்பிய பெண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
2. லஞ்சம் மற்றும் ஊழல்: பத்திரப்பதிவு, ஆர்.டி.ஓ-க்களில் மாற்றம் எப்போது?
கேள்வி: முந்தைய அரசு கொண்டு வந்த ‘ஸ்டார் 3.0’ மென்பொருளைச் சாமானியர்களால் எளிதாகப் பயன்படுத்த முடியவில்லை. நில அளவை, பட்டா மாறுதலில் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தையும், ஆர்.டி.ஓ அலுவலக ஊழல்களையும் புதிய அரசு எப்படி ஒழிக்கப் போகிறது?
- “கஜானா காலி” என வெள்ளை அறிக்கை வெளியிடுவதாகக் கூறும் அரசு, கஜானாவை நிரப்பும் முக்கியத் துறையான பத்திரப்பதிவுத் துறையின் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க இன்னும் களம் இறங்கவில்லை என மக்கள் குமுறுகின்றனர்.
3. பெண்களின் எதிர்பார்ப்பு: ‘சூப்பர் சிக்ஸ்’ வாக்குறுதிகள் என்னானது?
கேள்வி: ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கும் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500, மற்றும் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் (வெற்றிப் பயணத் திட்டம்) எப்போது அமலுக்கு வரும்?
- பட்ஜெட் மற்றும் காக் (CAG) அறிக்கைகளை ஆராயாமல் சாத்தியமில்லாத இலவசங்களை அள்ளி வீசினீர்களா? “அரசியல் அனுபவமுள்ள 3 முன்னாள் முதலமைச்சர்கள் எங்களுடன் இருக்கிறார்கள், அவகாசம் கொடுங்கள்” என்ற செங்கோட்டையனின் கருத்தைச் சாக்காகச் சொல்லக் கூடாது என்கிறார்கள் இல்லத்தரசிகள்.
4. வேதனையில் விவசாயிகள்: பயிர்க்கடன் தள்ளுபடியில் ‘அல்வா’?
கேள்வி: தேர்தல் வாக்குறுதியில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100% கடனும், பெரு விவசாயிகளுக்கு 50% கடனும் தள்ளுபடி என்றீர்கள். ஆனால், இப்போது நிலத்தை அளவுகோலாக வைக்காமல் ₹50,000 வரை பெற்றவர்களுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என நிபந்தனை விதித்து ஏமாற்றியது ஏன்?
- தற்போதைய அரசாணையால் சிறு விவசாயிகளுக்கு 25% கடன்கூட தள்ளுபடியாகவில்லை எனத் தவெக-வின் கூட்டணி இடதுசாரிகளே போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹60 கட்டாய மாமூல் வாங்குவதை எப்போது தடுப்பீர்கள்?
5. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு: CJP-யில் இணையும் ‘நண்பாஸ்’!
கேள்வி: தமிழக வேலைவாய்ப்பில் 75% உள்ளூர் இளைஞர்களுக்கே, பிணையின்றி ₹20 லட்சம் கல்விக்கடன், டிகிரி முடித்த வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை போன்ற வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்?
- தவெக அரசு பொறுப்பேற்று 2 வாரங்கள் கடந்தும் இளைஞர்கள் பக்கம் கவனம் திரும்பாததால், விரக்தியடைந்த இளைஞர்கள் இணையத்தில் ‘சிஜேபி’ (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி – ஏமாற்றமடைந்த சாமானியர்களின் ஆதங்கக் குரல்) என்ற அமைப்பை நோக்கி நகர்வதாக எச்சரிக்கின்றனர்.
6. மீனவர்கள் பிரச்சினை: கச்சத்தீவில் தவெக-வின் நிலைப்பாடு என்ன?
கேள்வி: இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 264 படகுகளையும் மீட்க மத்திய அரசுக்குக் கடிதம் எழுதும் ‘டெம்ப்ளேட்’ அரசியலைத் தாண்டி, கச்சத்தீவு மீட்பில் தவெக அரசின் கொள்கை என்ன?
- தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப் பகுதி மக்கள் தவெக-வுக்கு வாரி வழங்கிய வாக்குகளுக்குப் பிரதிபலனாக, புதிய மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கச்சத்தீவு குறித்துக் கேட்டால் ‘நோ கமெண்ட்ஸ்’ எனக் கூறுவது மீனவ சமூகத்தினரை வேதனைப்படுத்தியுள்ளது.
7. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்: அரசாணை 243 ரத்தாகுமா?
கேள்வி: கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட அளவிலான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்து, மாநில அளவில் மட்டுமே நடத்தும் அரசாணை 243-ஐ தவெக அரசு ரத்து செய்யுமா?
- ஜாக்டோ ஜியோ மற்றும் டிட்டோ ஜாக் அமைப்புகள் புதிய அரசை நம்பி வாக்களித்தன. ஆனால், மே மாதம் முடியப் போகும் சூழலிலும் இஎம்ஐஎஸ் (EMIS) தளம் மூலமான கலந்தாய்வு அறிவிப்பு இன்னும் வரவில்லை. பதவி உயர்வுக்குப் பணம் பெறும் கலாச்சாரம் கோட்டையில் ஒழியுமா?
மக்களின் குரல்
மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே… நீங்கள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டீர்கள். எனினும், பிற கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தவெக-வுக்குள் இழுக்கும் ‘தொலைநோக்கு’ அரசியல் ராஜதந்திரத்தில் காட்டும் அதே வேகத்தை, தங்களை நம்பி அரியணையில் ஏற்றிய சாமானிய மக்களின் இந்த 7 அத்தியாவசியக் கேள்விகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதில் காட்டுங்கள் என்பதே தற்போதைய மக்களின் ஒட்டுமொத்த குரலாகும்!
