சாலை விபத்துகளைத் தடுக்க வாகனங்களில் V2V வசதி கட்டாயம்? – அடுத்தாண்டு முதல் புதிய திட்டம்
technology

சாலை விபத்துகளைத் தடுக்க வாகனங்களில் V2V வசதி கட்டாயம்? – அடுத்தாண்டு முதல் புதிய திட்டம்

Jul 27, 2026

சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், வாகனங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களை தானாக பரிமாறிக்கொள்ளும் Vehicle-to-Vehicle (V2V) தொழில்நுட்பத்தை அடுத்தாண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் மூலம், ஒரு வாகனம் சாலையில் பயணிக்கும் போது அதன் அருகில் உள்ள மற்ற வாகனங்களுடன் வயர்லெஸ் முறையில் தானாகவே தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம், அருகிலுள்ள வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, இரு வாகனங்களுக்கும் இடையிலான தூரம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் ஓட்டுநருக்கு முன்கூட்டியே கிடைக்கும்.

இதனால், திடீர் பிரேக்கிங், மோதல் அபாயம், குருட்டு மூலை (Blind Spot) போன்ற சூழ்நிலைகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை கிடைத்து, விபத்துகளைத் தவிர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த V2V கருவிகள் சிம் கார்டு தேவையில்லாமல், தனித்துவமான வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் செயல்படும். இவை 5.875 GHz முதல் 5.905 GHz அலைவரிசையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய V2V திட்டத்திற்கான வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டு, பொதுமக்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்றுள்ளது. பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் இறுதி விதிமுறைகள் அறிவிக்கப்பட உள்ளன.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் முக்கிய தொழில்நுட்ப முயற்சியாக பார்க்கப்படும் இந்த திட்டம், எதிர்காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் புதிய வாகனங்களில் முக்கிய பாதுகாப்பு அம்சமாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *