போக்ஸோ வழக்குகளை விரைவாக விசாரிக்க தமிழகத்தில் 6 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு ஒப்புதல்
Tamilnadu

போக்ஸோ வழக்குகளை விரைவாக விசாரிக்க தமிழகத்தில் 6 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு ஒப்புதல்

Jul 9, 2026

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைவாக விசாரிக்கும் நோக்கில், தமிழகத்தில் புதிதாக 6 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறை தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தென்காசி, ஈரோடு, திருப்பூர், திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா ஒரு புதிய போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும். மேலும், வழக்குகள் அதிகளவில் நிலுவையில் உள்ளதால், சென்னையில் கூடுதலாக ஒரு போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உயர் நீதிமன்ற பதிவுத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்களில் தற்போது 18,675 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில், சென்னை போக்ஸோ நீதிமன்றத்தில் 1,204 வழக்குகளும், கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் 1,023 வழக்குகளும் விசாரணைக்காக நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் விரைவான நீதி வழங்கும் நோக்கில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

புதிய நீதிமன்றங்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, வழக்குகளின் விசாரணை வேகம் அதிகரிக்கும் என்றும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உதவும் என்றும் நீதித்துறை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *