மாட்டிக் கொண்டாரா பெரியார்? பெரியாரின் “உறவு முறை” – சர்வ காலத்திற்குமானதா?
Opinion

மாட்டிக் கொண்டாரா பெரியார்? பெரியாரின் “உறவு முறை” – சர்வ காலத்திற்குமானதா?

Feb 1, 2025

பெரியாரின் ”உறவு முறை” கட்டுரையில் இடம்பெற்றுள்ள சமயோசிதம் என்ற சொல்லை சீமானின் தம்பிகள் (அண்ணன்கள் உட்பட) பெரிதும் நம்பியுள்ளார்கள். இந்தச் சொல்லின் பொருள் தாய் அக்காள் தங்கை மகள் என்று யாரிடம் வேண்டுமானாலும் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கான அறிவுரைதான் என்று அவர்கள் பொது வெளியில் வற்புறுத்தக் கண்டோம். சமயோசிதம் என்பதன் தமிழ் விளக்கம் பற்றியெல்லாம் அன்பர்கள் எழுதியுள்ளார்கள். ஒற்றைச் சொல் அல்லது சொல்லியத்தை (வாக்கியம்) நம்பி இவ்வளவு முகன்மையான கருத்தாடலில் நிலை எடுப்பதற்கு மாறாக பெரியாரின் கட்டுரை எப்பொருள் குறித்து எழுதப்பட்டது? அதற்கான இடம் பொருள் ஏவல் என்ன? என்பதையெல்லாம் கருதிப் பார்த்தால் பெரியாரின் “உறவு முறை” சீமானுக்கு உதவாது என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

பெரியாரின் ”உறவு முறை”யை யார் படித்தாலும் ஓர் அடிப்படை உண்மையை மனத்தில் கொண்டு படிக்க வேண்டும். எல்லாக் காலத்துக்கும் எல்லா நிலத்துக்குமான பண்பாடு என்று எதுவுமில்லை. தமிழினம் உட்பட எந்த இனத்துக்கும் இப்படி ஓர் அறுதியான, முழுமுதலான, மாறவே மாறாத பண்பாடு இல்லை. எங்கள் தமிழறத்தில் எல்லாம் உள்ளது, அது எல்லாக் காலத்துக்குமானது என்று பெருமை பேசுவது அறிவுடைமை ஆகாது.

எல்லாக் காலத்துக்கும் எல்லா நிலத்துக்குமான அறுதிப் பண்பாடு எதுவுமில்லை என்ற அடிப்படை உண்மையை
இயற்கை வரலாறு, குமுக (சமூக) வரலாற்றின் துணை கொண்டு நிறுவும் இரு நூல்களை ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதினார்:

  1. இயற்கையின் இயங்கியல் (DIALECTICS OF NATURE);
  2. குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் (THE ORIGIN OF THE FAMILY, PRIVATE PROPERTY AND THE STATE)

இந்த நூல்களைப் படிக்கும் வாய்ப்பு தந்தை பெரியாருக்குக் கிடைத்ததா? என்று தெரிய வில்லை. ஆனால் பெரியாரின் ”உறவு முறை”யைப் புரிந்து கொள்ள இந்த நூல்களைப் படிப்பது உதவியாக இருக்கும். தோழர்கள் இடும்பாவனம் கார்த்தியும் டாக்டர் கார்த்திகேயனும் மட்டுமல்ல, சீமானும் கூட இந்த நூல்களைப் படிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன். ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்த நூல்கள் கிடைக்கின்றன.

நான் தூக்குக் கைதியாக இருந்த போது உடனிருந்த தோழர்களுக்கு இந்த இரு நூல்கள் மீதும் வகுப்பு நடத்தினேன். இப்போதும் கூட இந்த நூலகளைப் படிக்கும் படி அரசியல் மாணவர்களிடம் எடுத்துரைக்கிறேன்.

சரி, இயற்கையின் இயங்கியல் நூலில் ஒரு கட்டுரையாக இடம் பெற்றுள்ள ”மாந்தக் குரங்கு மாந்தராக மாறி வந்ததில் உழைப்பு ஆற்றிய பங்கு” என்ற தலைப்பில் எங்கெல்ஸ் குறிப்பிடும் ஒரு செய்தியை மட்டும் ஈண்டு எடுத்துக் காட்ட விரும்புகிறேன்,

Cannibalism என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மனிதரை மனிதர் அடித்துத் தின்பவர்களுக்கு cannibals என்று பெயர். There is no natural barrier to cannibalism என்றார் எங்கெல்ஸ். மனித இறைச்சி உண்பதற்கு இயற்கைத் தடை எதுவுமில்லையாம்! அதாவது குமுகத் தடை மட்டுமே உண்டு. இன்று உலகில் யாரும் மனித இறைச்சி உண்பதில்லை என்னும் அளவுக்கு குமுக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஒரு சுவையான மேற்கோள்:

”With all respect to the vegetarians, it has to be recognised that man did not come into existence without a flesh diet, and if the latter, among all peoples known to us, has led to cannibalism at some time or another (the forefathers of the Berliners, the Weletabians or Wilzians, used to eat their parents as late as the tenth century), that is of no consequence to us to-day.”

” மரக்கறி உண்போரை முழுமையாக மதிக்கும் போதே, இறைச்சி உணவோடுதான் மாந்தர் தோன்றினார் என்பதை அறிந்தேற்க வேண்டும். இறைச்சி உண்ணும்” பழக்கம் நமக்குத் தெரிந்த அனைத்து மக்களினங்களிடையிலும் ஏதோ ஒரு நேரத்தில் மாந்த இறைச்சி உண்ணும் பழக்கத்துக்கு இட்டுச் சென்றது என்றால், (பெர்லினர்கள், வெலிட்டெபியர்கள், அல்லது வில்சியர்களின் மூதாதையர் பத்தாம் நூற்றாண்டு வரையிலும் கூட தங்கள் பெற்றோரைத் தின்னும் வழக்கம் இருந்தது eன்றால்) இன்று அதனால் நமக்கு எதுவும் விளைந்து விடாது. ”

சமரன் (CHENNAI FOR ANIMAL LIBERATION) போன்ற மரக்கறித் தீவிரவாத vegans இதைப் படிக்க வேண்டும்.

போகட்டும். இதைப் படித்து சீமானோ நம் ’சமயோசித’ வாதக்காரர்களோ “பார்தீர்களா? இந்த எங்கெல்ஸ் மனிதரை மனிதர் அடித்துத் தின்னும் பழக்கத்தை வலியுறுத்துகின்றார் என்று முழங்காமல் இருந்தால் சரி.

பாலுறவுகள், குடும்ப உறவுகள் தொடர்பான அலசலுக்கு இன்னும் கூட முகன்மையானது எங்கெல்சின் மற்றொரு நூல்: “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்.” நம் விவாதப் பொருள் குறித்து அது சொல்வது என்ன? நாளை பார்ப்போம்.

ஒரு பணிவான வேண்டுகோள்: பின்னூட்டம் எழுதும் அன்பர்கள் வசைச் சொற்களைத் தவிர்க்க வேண்டுகிறேன். பதிலடியாகக் கூட கண்ணியக் குறைவாக எதுவும் எழுத வேண்டாம். இது ஒரு கருத்துச் சமர். நமது கருத்தாய்தம் வலுவாகவும் கூர்மையாகவும் இருப்பதால் நாம் நிலைதாழ வேண்டாம். சிந்தனை இல்லாத இடத்தில்தான் சிறுமை முளைக்கும்.

தொடர்கிறேன்…

தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *