தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?
Opinion

தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?

Jan 31, 2025

திராவிட இயக்கத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் வாதிட்டுள்ளனர்; கருதி வந்துள்ளனர். இதன் தொடர் விளைவாக எழுந்த சீமான் இன்று பெரியார் குறித்து அவதூறுகளைப் பரப்பும் வலதுசாரி ஆகிவிட்டார். இப்போதும் இவ்வாறு திருமுருகன் காந்தி வாதிட்டு வருகின்றார்.


இன்றைய நிலையில் இதுபற்றி திராவிட இயக்கத் தலைவர்களின் – சிந்தனையாளர்களின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை.
தந்தை பெரியார் மறைந்த போது (1973) பிரபாகரன் அவர்களின் வயது 19.
அப்போது இலங்கையில் தமிழர்களின் மீதான இன ஒடுக்குமுறை கடுமையானதாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கைத் தமிழர்களுக்குள் நிலவிய ஏற்றத் தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் கருதில் எடுக்காமல், “தமிழர்களின் மீதான சிங்களவர்களின் ஒடுக்குமுறையே முதன்மையான பிரச்சனை; இதற்குத் தீர்வு தனித் தமிழீழழ்; மற்றவற்றையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்கிற தேசியவாத அரசியல் சொல்லாடல் – செயல்பாடு ஒருபக்கம் எழுந்தது.

இந்த அரசியலின் மாபெரும் பிரகிருதியாக எழுந்து செயல்பட்டவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன். இதற்கு மாறாக, மற்றொரு பக்கம் ஏற்கனவே நடந்துகொண்டிருந்த சமூகச் சீர்திருத்த – சமூக மாற்றப் போராட்டங்களுடன் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை இணைக்க முயன்றவர்களும் சிலர் அரசியல் களத்தில் இருந்தனர். அவர்களைத் தம் சொந்த மண்ணிலிருந்து ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதற்கட்டத்தின் (1976-1990) முடிவில் (1986-1990) புலிகள் முற்றிலும் துடைத்தெறிந்தனர்.


இதன் பின்னரும்கூட தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களும் – கம்யூனிஸ்ட் இயக்கங்களும் உளமாற புலிகளை ஆதாரித்தனர்.
தமிழ்நாட்டுச் சூழலில் புலிகளின் ஆதரவு அரசியல் சொல்லாடலின் ஊடாகத் தேசியவாத அரசியல் சூறாவளியில் திடாவிட இயக்கத் தோழர்கள் சிக்கிக் கொண்டனர்; மென்மேலும் கம்யூனிஸ்ட் தோழர்கள் அமிழ்த்திக் கொண்டனர்.
தமிழ்நாட்டுச் சூழலில் இதன் முதல் பலியாக அமைந்தது, பெரியார் கட்டியெழுப்பிய பகுத்தறிவு சார்ந்த ஆதிக்க எதிர்ப்பு தமிழ் உணர்வு. அது ஆண்ட பரம்பரை பெருமிதத் தமிழ் உணர்வாக மடைமாற்றப்பட்டது. இதன் மடத்தனமான வெளிப்பாடு மணியரசன் என்றால், அற்பனத்தனமான வெளிப்பாடுதான் சீமான்.


ஈழ விடுதலைப் போர் பேரழிவில் முடிந்த பின்னரும்கூட, பெருமித தேசியவாத அரசியல் சொல்லாடலிலிருந்து தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தவர் வெளியில் வர முடியவில்லை. இதன் விளைவாகத்தான் இறுதிப் போரின் பேரழிவு ஏற்படுத்திய கடுந்துயரத்தையும் தமிழ் அரசியல் உணர்ச்சிப் பெருக்கையும் சீமான் என்கிற அரசியல் பொறுக்கி – கோமாளி தமது அரசியல் முதலீடாக ஆக்கிக் கொள்ள முடிந்தது.

சிந்தித்து பார்ப்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் வலி நிறைந்ததாக இருப்பினும், தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியாகக் கொஞ்சமேனும் தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் இல்லை என்பதுதான் நாம் ஏற்றுக்கொள்ள தயங்குகின்ற உண்மை.

ஒருவர், பெரியார் கொள்கைத் தொடர்ச்சியின் பிரபாகரன் என்றும், பிரபாகரனின் வாரிசு தான் மாட்டும்தான் என்றும் பழைய சீமான் போல பேசிக் கொண்டிருக்கலாம். அல்லது தோழர் திருமுருகன் காந்தி போல பெரியாரையும் பிரபாகரனையும் இணைத்து சிந்திக்கும் அரசியல் ஒன்றே தமிழ்நாட்டின் விடிவெள்ளி என்று கச்சைக் கட்டிக் கொண்டு வாதிட்டு, திமுக எதிர்ப்பிற்கு நியாயம் தேடலாம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் எந்த முன்னிபந்தனையும் இன்றி திராவிட – கம்யூனிஸ்ட் புரட்சி இயக்கங்கள் ஆதரித்தனர் என்பது கடந்தகால வரலாறு. நானும் ஆதரித்தேன். ஆனால் இன்றைக்கு நாம் சரியாகச் செயல்படுவதற்கு, குறைந்தப்பட்சம் நம்மை நாமே விமர்சனப்பூர்வமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.

இது ஓர் வேண்டுகோள் மட்டுமே. சிந்திக்கும் துணிவுடையோர் சிந்தனை செய்க! உரையாடுக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *