“விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு!” – ஆகஸ்ட் 3-இல் தஞ்சாவூரில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மு.க.ஸ்டாலின் அறிக்கை!
விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம் மற்றும் மேகதாது விவகாரம்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையின் விவரங்கள் இதோ:
“தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை மீறிப் பயிர்க்கடன் தள்ளுபடியில் த.வெ.க. அரசு ஏமாற்றம் அளித்துள்ளது.
சொன்னதைச் செய்ய நேரம் கேட்ட முதலமைச்சர், இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாவது விவசாயிகளிடம் சொல்லியிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கு மாறாக, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மவுனம் காத்து வருகிறார்.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா செல்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மேகதாது விவகாரம் தொடர்பாகத் தீர்ப்பாயம் அமைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்திய நிலையில், இந்த கர்நாடகப் பயணம் இதனை நீர்த்துப்போகச் செய்யாதா?
முதலமைச்சரின் திரைப்படம் கர்நாடகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அமைதி காப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையில் இந்த அரசு inactive ஆக இருப்பது நல்லதல்ல.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுகதான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா?
அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.”
குருவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு கோரிக்கை; ஆகஸ்ட் 3-இல் தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்!
நிவாரணக் கோரிக்கை மற்றும் போராட்ட அறிவிப்பு வருமாறு:
- 2,500 கோடி ரூபாய் இழப்பு: இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு 14 இலட்சம் விவசாயிகள் தவிக்கிறார்கள்.
- நிவாரணத் தொகுப்பு கோரிக்கை: பாதிக்கப்பட்டுள்ள 14 லட்சம் விவசாயிகளுக்குக் குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பினைக் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும்.
- தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்: காவிரி உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி 03-08-2026 அன்று காலை 10 மணியளவில், தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- அனைவருக்கும் அழைப்பு: இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விவசாயச் சங்கத் தோழர்களும், ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
காவிரி உரிமை மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் த.வெ.க அரசைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
