‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயர் மாற்றம்: தமிழகம் முழுவதும் ‘மகளிர் பயணம்’ என பேருந்துகள் இயக்கம்
Tamilnadu

‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயர் மாற்றம்: தமிழகம் முழுவதும் ‘மகளிர் பயணம்’ என பேருந்துகள் இயக்கம்

Jul 9, 2026

திமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. தற்போது, ‘மகளிர் பயணம்’ என்ற புதிய பெயருடன் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்படும் பெரும்பாலான கட்டணமில்லா நகரப் பேருந்துகளில், பழைய ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற பெயருக்கு பதிலாக ‘மகளிர் பயணம்’ என்ற புதிய பெயர் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றபோது, பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக செயல்படுத்தப்பட்டது. அப்போது, தனது முதல் அமைச்சரவை நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தத் திட்டத்திற்கான கோப்பில் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டிருந்தார்.

தற்போது திட்டத்தின் பெயரில் இடம்பெற்றிருந்த ‘விடியல்’ என்ற சொல் நீக்கப்பட்டு, ‘மகளிர் பயணம்’ என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாற்றம் தொடர்பாக போக்குவரத்துத் துறை சார்பில் பேருந்துகளில் புதிய பெயர் ஒட்டப்பட்டு வருகிறது.

இந்த பெயர் மாற்றம் அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திட்டத்தின் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளதா அல்லது திட்டத்தில் வேறு நிர்வாக மாற்றங்களும் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்துக்காக பலரும் காத்திருக்கின்றனர்.

இதுவரை, திட்டத்தின் பெயர் மாற்றம் குறித்து தமிழக அரசு விரிவான விளக்கத்தை வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *