பொதுமைக் கொள்கையை ஏற்று வாழ்தல் சிறப்பானது. அறிவியல் நோக்கிலான பொதுமைக் கொள்கையாகிய மார்க்சியத்தைப் பற்றி நிற்கிற எவரும் அது குறித்துப் பெருமை கொள்வது சரியானது, முறையானது. இது அறமும் அறிவும் சார்ந்த பெருமை, ஆனால் அடக்கத்தை உதறி விட்டுத் தானே சரி, தான் மட்டுமே சரி என்று மமதை கொள்வதற்கு இது நியாயமாகாது.
மார்க்சியம் அதனளவில் முக்காலும் பொருந்தும் பேறுடைத்த அறுதியான அறிவுப் பெட்டகம் அன்று. வளர்ந்து செல்லாத எதுவும் அறிவியல் ஆகாது. மார்க்சிய மூலவர்களிடம் அறமும் அறிவும் சார்ந்த தன்னடக்கம் இருந்தது. மார்க்சியத்துக்கு முந்தைய சிந்தனை வளர்ச்சியை அவர்கள் அறிந்தேற்று உள்வாங்கித் தங்கள் அறிவு விளக்கை ஏற்றினார்கள். அளவு மாற்றம் பண்பு மாற்றமாவதும், முரண்பாடுகள் வளர்ச்சிக்கு வழிகோலுவதும், நிலைமறுப்பின் நிலைமறுப்புமான இயங்கியல் நெறிகள் மற்றச் சிந்தனை மரபுகளுக்குப் பொருந்துவது போலவே மார்க்சியச் சிந்தனை மரபுக்கும் பொருந்தும்.
மார்க்சியத்துக்கு முன்னும் பின்னும் அதற்குச் சமகாலத்திலுமான சிந்தனை மரபுகளையும் அவற்றின் சாதனைகளையும் தொடர்ந்து மார்க்சியம் அறிந்தேற்கிறது. மார்க்சியத்தில் இல்லாதது எதுவுமில்லை எனக் கருதி, மார்க்சியமல்லாத மற்ற சிந்தனைகளை “உதிரிக் கோட்பாடுகளாக” அலட்சியம் செய்வது ஒரு சரியான மார்க்சியப் பயிற்சியன்று.
குமுகச் சிந்தனை என்பது குமுக இயக்கத்தின் விளைச்சலே. எனவேதான் வரலாற்று வழியில் முன்சென்ற இயக்கங்களைப் பயில்வதும் அவற்றிலிருந்து ஒளி பெறுவதும் மார்க்சியர்களின் கடமையாகும். ஸ்பார்ட்டகசைத் தொன்மைக் காலப் பாட்டாளியாகப் போற்றிப் புதுமக் காலப் பாட்டாளியின் இயக்கத்துக்கு உரமேற்றியவர் கார்ல் மார்க்ஸ் எனச் சென்ற இடுகையில் காட்டினேன்.
வட அமெரிக்க வரலாற்றில் எழுந்த இருபெரும் குமுக இயக்கங்களான அமெரிக்க விடுதலைப் போரையும், அடிமைமுறையை ஒழித்த உள்நாட்டுப் போரையும் மார்க்ஸ் எப்படிப் பார்த்தார் எனத் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அடிமைமுறையை ஒழித்த உள்நாட்டுப் போரில் ஆபிரகாம் லிங்கனின் வரலாற்று வகிபாகத்தை மார்க்ஸ் மதித்த பாங்கு அரசியல் கல்வியில் ஒரு பாடம்.
1850களில் நியூ யார்க் டிரிப்யூன் ஏட்டுக்கான ஐரோப்பியச் செய்தியாளராக மார்க்ஸ் பணியாற்றினார். அட்லாண்டிக் பெருங்கடலின் இக்கரையில் இருந்த படி அக்கரையில் அமெரிக்க வாசகர்களுக்காக அடுக்கடுக்காகப் பல கட்டுரைகள் எழுதினார். இந்திய நிலைமைகள் பற்றி அவர் எழுதிய பலவும் பிரித்தானிய அரசின் தாக்கங்களையும், வர்ண சாதிக் கட்டமைப்பையும் விளங்க வைக்கப் பெரிதும் பயன்படும். இவற்றை என் அரசியல் வகுப்புகளில் விரிவாக எடுத்துக்காட்டியுள்ளேன்.
ஐரோப்பாவில் 1848ஆம் ஆண்டு நடந்த புரட்சிகளுக்குப் பின் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த தோழர்கள் பலரோடும் மார்க்ஸ் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். அவருடைய தோழர்களில் ஒருவரான ஜோசப் வெடெமெயர் பிற்காலத்தில் அமெரிக்க ஒன்றிய இராணுவத்தில் ஒரு தளபதியாகப் பணியாற்றினார். உள்நாட்டுப் போர் நெருக்கடிக்கிடையே மார்க்ஸ் வேலையிழந்த பிறகு வியன்னாவிலிருந்து வெளிவந்த ஓர் ஏட்டில் அவர் வட அமெரிக்க உள்நாட்டுப் போர் குறித்து எழுதியவை ஐரோப்பிய முற்போக்காளர்களிடையே அது பற்றித் தெளிவுண்டாக உதவிற்று.
பொதுவாக பிரித்தானிய மேட்டுக்குடியினர் அமெரிக்க அடிமை முறைக்கு ஆதரவான பெருங்கூட்டரசை (Confederacy) ஆதரித்த போது மார்க்ஸ் ஆங்கிலேயத் தொழிலாளர் வகுப்பின் சார்பில் ஒன்றியத்தின் (Union) பக்கம் நின்றார். முதல் அகிலம் எனப்படும் முதல் பன்னாட்டுத் தொழிலாளர் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மார்க்ஸ் வழிகாட்டினார்.
மார்க்சின் நிலைப்பாடு அறத்தின் பாற்பட்டு அடிமைமுறைக்கு எதிரான ஒன்று என்பது மட்டுமன்று. உள்நாட்டுப் போரில் லிங்கன் தலைமையிலான ஒன்றியம் வெற்றி பெறுவது தொழிலாளர் வகுப்பின் விடுதலை நோக்கிய முகன்மைப் படி என்றும் மார்க்ஸ் நம்பினார். அடிமைத் தளையை அறுத்தெறிந்து விடுமை காண்பது தொழிலாளர் வகுப்பு அமைப்பாக அணிதிரளப் பயன்படும் என்று அவர் நம்பினார். அடிமைமுறை ஒழிக்கப்படுவதற்கும் தொழிலாளர் வகுப்பின் போராட்டத்துக்குமான நெருங்கிய தொடர்பைக் கருதி அவர் லிங்கனை ஆதரித்தார். லிங்கனைத் தன் நேயக் கூட்டாளியாக அணுகினார்.
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் (’முதல் அகிலம்’) சார்பில் லிங்கனுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் சொன்னார்:
”அடிமைத் தளை பூட்டிய இனத்தை மீட்பதற்கும், குமுக உலகை மீள் கட்டுமானம் செய்வதற்குமான ஈடிணையற்ற போராட்டத்தில் தொழிலாளர் வகுப்பின் ஒருமுகச் சிந்தை கொண்ட மகனாகிய ஆபிரகாம் லிங்கன் தன்னாட்டுக்குத் தலைமை ஏற்கும் படி அமைந்திருப்பது வரவிருக்கும் ஊழிக்குக் கட்டியங்கூறுவதாக ஐரோப்பாவின் தொழிலாளர்கள் கருதுகின்றார்கள்.”
“The workingmen of Europe consider it an earnest of the epoch to come, that it fell to the lot of Abraham Lincoln, the single-minded son of the working class, to lead his country through matchless struggle for the rescue of an enchained race and the reconstruction of the social world.”
அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்த ஆண்டு 1865. மார்க்சின் பெரும்படைப்பாகிய மூலமுதல் இயல் ஒன்று (CAPITAL volume I) வெளிவந்த ஆண்டு 1867. இந்நூலின் முன்னுரையில் மார்க்ஸ் அமெரிக்க உள்நாட்டுப் போரை “வரவிருக்கும் குமுகியப் புரட்சிகளின் முன்னோடி” (“harbinger of socialist revolutions to come”) என்று வண்ணித்தார். அடிமைமுறை ஒழிப்பை வேலைநாளுடன் அவர் தொடர்புபடுத்தினார்.
மார்க்ஸ் எழுதினார்: “அடிமைத்தனத்தின் சாவிலிருந்து உடனே ஒரு புதிய வாழ்க்கை பிறந்தது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் முதற்பயன் எட்டுமணிநேரப் போராட்டம் ஆகும். இந்தப் போராட்டம் அட்லாண்டிக் முதல் பசிபிக் வரை, புது இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரை நாலுகால்ப் பாய்ச்சலில் பரவிற்று.”
“A new life,” Marx wrote, “immediately arose from the death of slavery. The first fruit of the American Civil War was the eight hours’ agitation, which ran from the Atlantic to the Pacific, from New England to California, with the seven-league boots of the locomotive.”
முதலியம் (முதலாளித்துவம்) என்பது ஒரு குமுக ஒழுங்கு (சமூக அமைப்பு)! அது பாவச் செயலோ கொடுங்குற்றமோ அன்று! ’அயோக்கியத்தனம்’ அன்று! முதலியச் சிந்தனையின் முற்போக்கான வகிபாகத்தை மார்க்சியம் அறிந்தேற்கிறது.
“அடிமை முறைக்கு முடிவு கட்டிய உள்நாட்டுப் போரில் ஒன்றியத் தரப்பு [லிங்கன் தரப்பு] முதலிய (முதலாளித்துவ) ஆற்றல்களின் சார்பில் நின்றது. எனவே அதுதான் அடிமைமுறையை ஒழிக்கும் நிலையில் இருந்தது. அடிமைமுறை அறநோக்கில் தீங்கானது மட்டுமன்று. முதலிய உழைப்பு முறைமையின் விரிவாக்கத்தையும், இவ்வாறு புரட்சியக் குமுகிய உணர்வையும் (புரட்சிகர சோசலிச உணர்வையும்) மந்தப்படுத்திய காரணத்தாலும் தீங்கானது.”
”… it was the Union side that represented the forces of capitalism, and thus the Union side that was also positioned to destroy slavery. Not only bad at an ethical level, slavery was also bad because it slowed the expansion of a capitalist labor system and, thus, the development of revolutionary socialist consciousness…”
ஆபிரகாம் லிங்கன் வட அமெரிக்க முதலிய வல்லரசின் தலைவர் என்பதாலேயே அடிமை முறை ஒழிப்புப் போரில் அவரது வகிபாகத்தை மார்க்ஸ் மதிக்கத் தவற வில்லை. அமெரிக்கத் தொழிலாளர்தம் வகுப்புப் போராட்டத்துக்கு அடிமைமுறைக்கு எதிரான சிந்தனைகளும் போராட்டமும் முன்தேவைகள் என்பது போலவே, எமது மண்ணிலும் வகுப்புப் போராட்டத்துக்குத் தொழிலாளர்களை அணிதிரட்ட சாதியொழிப்புப் போராட்டமும் அதற்கான கருத்தாய்தங்களும் தேவை – இன்றியமையாத் தேவை – எனக் கருதுவோமானால் அவற்றை ”உதிரிக் கோட்பாடுகளாக”க் கொண்டு புறக்கணிக்க மார்க்சியர்களால் இயலாதென்று விளங்கும்.
தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் பாட்டாளி வகுப்பின் நண்பர்களாக மதிக்க அவர்கள் மார்க்சியர்களாக இருக்க வேண்டுமென்ற தேவையில்லை. அவர்களை சாதியொழிப்புப் போராட்டக் காரர்களாக அறிந்தேற்பதே போதுமானது.
முந்தைய இடுகை ஒன்றின் இறுதியில் கூறியதை மீண்டும் கூறாமலிருக்க முடியவில்லை.
“Labor in the white skin can never free itself as long as labor in the black skin is branded.” — Karl Marx, Capital.
கறுப்புத் தொழிலாளருக்கு விடுதலை இல்லாமல் வெள்ளைத் தொழிலாளருக்கு விடுதலை இல்லை என்றார் கார்ல் மார்க்ஸ் – வகுப்பு விடுதலைப் போராட்டத்தின் ஆசான்.
பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்றார் பெரியார் – சமூக நீதிப் போராட்டத்தின் ஆசான்.
தொடர்கிறேன்…
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்