விவசாயிகளுக்கு ‘அல்வா’ கொடுத்துவிட்டாரா விஜய்? கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி அறிவிப்பால் டெல்டாவில் கொந்தளிப்பு!
Tamilnadu

விவசாயிகளுக்கு ‘அல்வா’ கொடுத்துவிட்டாரா விஜய்? கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி அறிவிப்பால் டெல்டாவில் கொந்தளிப்பு!

May 26, 2026

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்குப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு விகிதங்களின் (Slabs) அடிப்படையில் மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி அறிவிப்பு டெல்டா பாசன விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளைத் தரம் பிரிப்பதா? சங்கங்கள் கடும் கண்டனம்

தமிழக அரசின் இந்த புதிய நிபந்தனைகளுக்குப் பல்வேறு விவசாயச் சங்கங்களின் தலைவர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்:

  • சுந்தர விமல்நாதன் (காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்): “சிறு, குறு, பெரிய விவசாயிகள் எனத் தரம் பிரித்துக் கடன் தள்ளுபடி செய்வது கண்டனத்திற்குரியது. அனைத்து விவசாயிகளும் ஒரே உணவு தானியத்தைத் தான் உற்பத்தி செய்கின்றனர். அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் தான் முதல்வர் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார்.”
  • வெ.ஜீவக்குமார் (காவிரி உரிமை விவசாய செயற்பாட்டாளர்): “கடந்த கால அரசுகள் விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்தன. ஆனால், தற்போது 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை என கால வரம்பு நிர்ணயித்துள்ளனர். இதனை 2024-ல் இருந்தே நீட்டித்துக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.”
  • மகாதானபுரம் ராஜாராம் (காவிரி பாசன விவசாயிகள் நலச் சங்கம்): “ஒரு ஏக்கர் வைத்துள்ள விவசாயிக்கு ரூ.5 ஆயிரம் நஷ்டம் என்றால், 10 ஏக்கர் வைத்துள்ளவருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டம் ஆகும். நிலத்தின் அளவைக் கணக்கிட்டு முழுமையான நஷ்டஈடு வழங்கினால்தான் விவசாயிகளுக்குப் பயன் கிடைக்கும்.”

தோட்டக்கலைப் பயிர் விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றம்!

இந்த அறிவிப்பு குறித்துத் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணியின் துணைத் தலைவர் வயலூர் ராஜேந்திரன் பேசுகையில், “இந்த புதிய திட்டத்தால் ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நெல் சாகுபடி செய்தவர்கள் மட்டுமே பயன்பெற முடியும்.

இரண்டு ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டவர்கள் மற்றும் கரும்பு, வாழை, வெற்றிலை, மஞ்சள் போன்ற தோட்டப் பயிர்களை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்தவர்கள் கூட இதன் மூலம் பயன்பெற முடியாது” என்றார்.

தேர்தல் வாக்குறுதியை மீறிய தவெக அரசு?

விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் தவெக அரசு அல்வா கொடுத்துள்ளதாகத் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் காவிரி தனபாலன் சாடியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்:

“தேர்தல் வாக்குறுதியில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் கடன் தள்ளுபடி செய்வோம் என்றார்கள். ஆனால், தற்போது சிறு, குறு விவசாயிகளுக்கு 25 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு வெறும் 5 சதவீதமும் மட்டுமே தள்ளுபடி கிடைத்துள்ளது. தவெக-வை நம்பி வாக்களித்த விவசாயிகளை முதல்வர் விஜய் முழுமையாக ஏமாற்றிவிட்டார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *