தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு: “தமிழ்நாட்டில் அரசு இருக்கிறதா?” – கனிமொழி கடும் விமர்சனம்
Tamilnadu

தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு: “தமிழ்நாட்டில் அரசு இருக்கிறதா?” – கனிமொழி கடும் விமர்சனம்

Jul 23, 2026

தூத்துக்குடியில் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் போலீஸ் சித்திரவதையால் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

அத்துடன், “நாளை பணிக்குத் திரும்பிய பிறகாவது இந்த காவல் மரணம் குறித்து அவர்கள் வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்” எனவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி இளைஞரின் உயிரிழப்பு தொடர்பாக குடும்பத்தினர் காவல்துறையினர் தாக்கியதாக குற்றம்சாட்டி நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பிலிருந்து எழுந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *