அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைப்பு
Tamilnadu

அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைப்பு

Jul 10, 2026

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான தாக்குதல் வழக்கின் விசாரணையை புதுச்சேரி நீதிமன்றம் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு தனது சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இன்று நடைபெற்ற விசாரணையில் அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என வழங்கிய விலக்கு உத்தரவு நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகலைப் பெற நேரில் ஆஜராகுமாறு முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அமைச்சர் தொடர்ந்து ஆஜராகவில்லை. இதனால் ஜூலை 10-ஆம் தேதி கட்டாயமாக ஆஜராக வேண்டும் என புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், வழக்கை ரத்து செய்யவும், நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, குடும்பப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பும் சமரசம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகக் கருதி, வழக்கை உயர்நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தார். மேலும், அமைச்சர் மரிய வில்சன், அவரது தந்தை, சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோர் ஜூலை 13-ஆம் தேதி சமரச மையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் இடைக்கால விலக்கு உத்தரவை தொடர்ந்து, புதுச்சேரி நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *