கன்னிகைப்பேர் அமோனியா வாயுக் கசிவு: 18 உயிரிழப்புக்கு காரணமான தனியார் நிறுவனத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’
Tamilnadu

கன்னிகைப்பேர் அமோனியா வாயுக் கசிவு: 18 உயிரிழப்புக்கு காரணமான தனியார் நிறுவனத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’

Jul 9, 2026

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில், தொடர்புடைய தனியார் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்துக்கு வருவாய்த் துறையினர் அதிகாரப்பூர்வமாக ‘சீல்’ வைத்துள்ளனர்.

பெரியபாளையம் அருகே செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. கடந்த ஜூன் 21-ஆம் தேதி நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவில் மொத்தம் 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

விபத்துக்குப் பிறகு, நிறுவனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 400 டன் கடல் உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக வேறு குளிர்சாதன கிடங்குகளுக்கு மாற்றப்பட்டன. தொடர்ந்து, தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் நிறுவன வளாகத்தில் இருந்த அமோனியா வாயுவை அகற்றும் பணிகள் பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டன.

முதல் கட்டமாக சேமிப்பு தொட்டிகளில் இருந்த சுமார் 2.9 டன் அமோனியா வாயு அகற்றப்பட்டது. பின்னர், குளிரூட்டும் அறைகள் மற்றும் குழாய்களில் தேங்கியிருந்த சுமார் 700 கிலோ அமோனியா வாயு, சல்பியூரிக் அமிலம் பயன்படுத்தி பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் முன்னிலையில் வருவாய்த் துறையினர் நிறுவன வளாகத்தை ஆய்வு செய்தனர்.

அதன்பின், நிர்வாக அலுவலகம், தொழிலாளர்கள் தங்கும் விடுதி, உணவு பதப்படுத்தும் பிரிவு, அமோனியா சேமிப்பு தொட்டிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு அதிகாரப்பூர்வமாக ‘சீல்’ வைக்கப்பட்டது.

மேலும், நிறுவன வளாகத்தில் இருந்த சில கழிவுப் பொருட்கள் மற்றும் வாகனங்களை அகற்றும் பணிகள் நிறைவடைந்த பின்னர், நிறுவனத்தின் பிரதான நுழைவாயிலும் முழுமையாக மூடி ‘சீல்’ வைக்கப்படும் என்று கோட்டாட்சியர் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் அடிப்படையில், பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் விதிமீறல்கள் நடந்துள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *