“விஜய் அரசு செய்வது மாபெரும் ஸ்கேம்!” பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அட்டாக்!
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி அறிவிப்பு தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுத் தள்ளுபடி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு டெல்டா விவசாயிகள் மத்தியில் ஏற்கனவே எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், தற்போது திமுக முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதியை மீறிய தவெக அரசு: உதயநிதி சாடல்
கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்துத் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவின் விவரம் வருமாறு:
“பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் தமிழக விவசாயிகளைத் தவெக அரசு முற்றிலுமாக ஏமாற்றி இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது வெறும் ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று புதிய நிபந்தனை விதித்துச் சொல்லி இருக்கிறார்கள். இது உழைக்கும் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி ஆகும். இது ஒரு அப்பட்டமான நம்பிக்கை மோசடி.”
200 யூனிட் இலவச மின்சாரத்திலும் ஏமாற்றம்!
தொடர்ந்து தவெக அரசின் முந்தைய திட்டங்களையும் ஒப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். “ஏற்கனவே, வீடுகளுக்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தவெக தேர்தல் வாக்குறுதி அளித்தது.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின், ஒரு நுகர்வோர் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் இந்த 200 யூனிட் இலவச மின்சாரம் கிடையாது என்று கூறி மக்களுக்குப் பேரதிர்ச்சி தந்தார்கள். இலவச மின்சாரத் திட்டத்தைத் தொடர்ந்து, இப்போது பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரிலும் ஒரு பெரிய ஸ்கேமை (SCAM) செய்கிறார்கள்” என உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
“இன்னும் எத்தனை ஏமாற்றங்கள்? சிஎம் சார்!”
அரசின் இந்த அடுத்தடுத்த நிபந்தனைகளால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தவெக அரசு மீது அதிருப்தியில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதிவின் நிறைவாக, “வாக்குறுதி அளித்தபடி எதையும் செய்யாமல், மக்களை ஏமாற்றுவதையே இந்த அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் மனசளவுல எப்போதும் தயாரா இருக்கணுமா CM saar?” என்று முதலமைச்சர் விஜய்யை நோக்கி உதயநிதி ஸ்டாலின் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். உதயநிதியின் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
