“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாறு கொண்டது பாகிஸ்தான்!” ஐநா-வில் இந்தியப் பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி ஆவேசம்!
ஐநா பாதுகாப்பு சபையில் ‘ஆயுத மோதல்களில் பொதுமக்களைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பார்வதனேனி கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு அவர் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துப் பேசினார்.
சொந்த மக்கள் மீதே குண்டு வீசிய நாடு
பாகிஸ்தானின் கடந்த காலக் கொடூரங்களை இந்தியப் பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி பட்டியலிட்டார். அவர் பேசியதன் விவரம் வருமாறு:
“நீண்டகாலமாக இனப்படுகொலைகளில் ஈடுபட்ட களங்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான். அப்படிப்பட்ட ஒரு நாடு இந்த அவையில் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையான காஷ்மீர் குறித்துப் பேசுவது முரண்பாடானது.
கடந்த மார்ச் மாதம் புனித ரமலான் மாதத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் காட்டுமிராண்டித்தனமான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 269 பேர் உயிரிழந்தனர். 122 பேர் காயமடைந்தனர். இதனை உலகம் இன்னும் மறக்கவில்லை.
பாகிஸ்தான் எல்லை தாண்டி நடத்திய வன்முறை காரணமாக 94,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐநா (UNAMA) மதிப்பிட்டுள்ளது. தன் சொந்த மக்கள் மீது குண்டு வீசி திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்திய ஒரு நாடு இதுவாகும்.”
1971 பங்களாதேஷ் கொடூரம்: ‘ஆபரேஷன் சர்ச்லைட்’
தொடர்ந்து பேசிய அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் வரலாற்றுப் பிழையைச் சுட்டிக்காட்டினார்.
“கடந்த 1971-ம் ஆண்டு மார்ச் மாதம் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) ‘ஆபரேஷன் சர்ச்லைட்’ என்ற ரகசிய நடவடிக்கையைப் பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது. அந்த நடவடிக்கையின் போது தனது சொந்த ராணுவத்தைக் கொண்டே 4 லட்சம் பெண்களை இனப்படுகொலை செய்தது.
மேலும் பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கவும் பாகிஸ்தான் அனுமதித்தது. இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடத்தையைப் பாகிஸ்தான் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து செய்கிறது. தன் உள்நாட்டுத் தோல்விகளை மறைக்கவே மீண்டும் மீண்டும் இத்தகைய செயல்களில் அது ஈடுபடுகிறது” என ஹரிஷ் பர்வதனேனி சாடினார்.
