நடிகர் விஷால் – சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்: நடிகர் சங்கக் கட்டடத்திலேயே திருமணம்
Cinema

நடிகர் விஷால் – சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்: நடிகர் சங்கக் கட்டடத்திலேயே திருமணம்

Aug 29, 2025

நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா ஆகியோரின் திருமணம் குறித்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஜோடி, இன்று (ஆகஸ்ட் 29) தங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை சென்னையில் நடத்தியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. திரைத்துறையினரும், ரசிகர்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் சந்திப்பில் விஷால் நெகிழ்ச்சி

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விஷால் தனது திருமண திட்டம் குறித்து மனம் திறந்து பேசினார். “சாய் தன்ஷிகாவுடன் எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் கிடைத்து வருகின்றன” என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், அவர் பேசும்போது, “நடிகர் சங்கக் கட்டடத்தின் திறப்பு விழா இன்னும் இரண்டு மாதங்களில் கோலாகலமாக நடைபெறும். இன்றைக்கே திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தோம். ஆனால், நடிகர் சங்கக் கட்டடத்தின் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாததால் திருமணம் தாமதமாகி இருக்கிறது” என்றார்.

“என் தேவதை சாய் தன்ஷிகா”

சாய் தன்ஷிகாவை தனது வாழ்க்கை துணைவியாகப் பெற்றது குறித்து விஷால் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பேசினார். “கடவுளாப் பார்த்து எனக்கு அனுப்பிய என் வாழ்க்கை துணைவிதான் தன்ஷிகா. அவர் என்னுடைய தேவதை” என்று குறிப்பிட்டார். மேலும், “கூடிய விரைவில் திருமணம் நடக்கும். நான் உறுதியளித்தபடி, நடிகர் சங்கக் கட்டடத்தில்தான் எனது திருமணம் நடக்கும். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைவருக்கும் நன்றி” என்றும் தெரிவித்தார்.

விஷாலின் இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சங்கக் கட்டடத்தின் திறப்பு விழா மற்றும் விஷாலின் திருமணம் என அடுத்தடுத்து வரவிருக்கும் முக்கிய நிகழ்வுகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *