மாட்டிக் கொண்டாரா பெரியார்? (22)
Opinion

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (22)

Mar 12, 2025

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூற்றை மறுக்குமுகத்தான் இந்த இடுகைத் தொடரை எழுதத் தொடங்கினேன். ஆனால் இடைக்காலத்தில் அன்பர்கள் இட்ட பின்னூட்டங்களால் இந்த உரையாடல் சற்றே திசைமாறிப் போய் விட்டது. மார்க்சின் பால் நேசமும் மார்க்சியத்தின் பால் நாட்டமும் கொண்ட சில தோழர்கள் மார்க்ஸ் அல்லாத முற்போக்குச் சிந்தனையாளர்களையும் மார்க்சியமல்லாத சிந்தனை மரபுகளையும் அறிந்தேற்க மறுப்பதாக எனக்குத் தோன்றியது. மார்க்சியம் அனைத்து நோய்களுக்கும் மருந்தாகிய ’சர்வரோக நிவாரணி’ அல்ல என்பதை உணர்த்த வேண்டிய தேவை இருப்பதாக நம்பினேன். மார்க்சும் எங்கெல்சும் வரலாற்று மாந்தர்களுக்கும் வரலாற்று நிகழ்வுகளுக்கும் எத்துணை மதிப்பளித்தார்கள் என்பதைச் சான்றுகளோடு நிறுவக் கருதினேன்.

இந்த வகையில்தான் ரோமானிய அடிமைகளின் விடுதலைப் போர்த்தலைவர் ஸ்பார்ட்டகசையும், ஸ்பார்ட்டகஸ் வாழ்வுக்கும் பணிக்கும் ஈகத்துக்கும் மார்க்சும் மார்க்சியப் போராளிகளும் அளித்த உயர் மதிப்பையும் எடுத்துக் காட்டினேன்.

இரண்டாவதாக, அடிமை முறைக்கு முற்றுப்புள்ளி வைத்த வட அமெரிக்க உள்நாட்டுப் போர் குறித்தும், இந்தப் போரை வழிநடத்தி அடிமைகளின் விடுமைக்கு வழிகோலிய ஆபிரகாம் லிங்கன் குறித்தும் மார்க்ஸ் கொண்டிருந்த பார்வையை எடுத்துக்காட்டினேன். அடிமை முறைக்கு எதிரான போருடன் கூலியடிமைகளின் போராட்டத்தை மார்க்ஸ் இணைத்துக் காட்டிய முறையில் மார்க்சின் அறிவியல், அறவியல் கண்ணோட்டங்கள் (scientific and ethical viewpoints) மிளிர்ந்தன. இந்த இணைப்பில் நமக்கான ஒளிவிளக்கம் இருப்பதைக் கண்டு கொண்டால் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் பெருமதிப்பு விளங்கும்.

மூன்றாவதாக, வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் வர்ண-சாதி மறுப்பு, மத மறுப்பு, வேத மறுப்புச் சிந்தனைகளின் ஒரு தெறிப்பைச் சுட்டி, திருவிகவும் பெரியாரும் அவரது கொள்கையில் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காணத் தந்தேன். தமிழ்நாட்டில் பொதுமையர் (கம்யூனிஸ்டுகள்) தமது வறட்டுக் கொள்கைகளால் வள்ளலாரைக் கொண்டாடத் தவறி விட்டதாகவே தோன்றுகிறது.

தோழர் மாவோ (மா சேதுங்) சொன்னார்: சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? அவை வானிலிருந்து வந்து குதிக்கின்றனவா? இல்லை. அவை சமூக நடைமுறையிலிருந்து வருகின்றன, அதிலிருந்து மட்டுமே வருகின்றன. அவை மூன்று வகையான சமூக நடைமுறையிலிருந்து வருகின்றன: ஆக்கத்துக்கான (உற்பத்திக்கான) போராட்டம், வகுப்புப் போராட்டம், அறிவியல் ஆய்வு.

வகுப்புப் போராட்டம் பற்பல வழிகளிலும் வடிவங்களிலும் நிகழ்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்துப் பழங்குடி மக்கள் வெள்ளை வன்குடியேற்றத்துக்கு எதிராக நடத்தியதும் ஒரு வகையான வகுப்புப் போராட்டமே (வர்க்கப் போராட்டமே). இந்தப் போராட்டத்தில் மார்க்சிய மூலவர்கள் கொண்டிருந்த ஈடுபாடும் அக்கறையும் அவர்களின் வரலாற்றுத் தெளிவுக்கு உரமிட்டன. இதற்குச் சான்றான ஒரு நிகழ்ச்சிதான் இசாந்திலவானா.

தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் முதல் கட்டத்தில் ஆப்பிரிக்கப் பழங்குடி இனங்கள் தங்கள் தங்கள் குலத் தலைவர்கள் அல்லது மன்னர்களின் தலைமையில் வெள்ளை வந்தேறிகளை எதிர்த்துப் போரிட்டன. பிற்காலத்தில் நெல்சன் மண்டேலா பிரிட்டோரியா நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நின்று சொன்னார்:

“டிரான்ஸ்காயில் என் இளமைப் பருவத்தில் எம் குலத்து முதியவர்கள் பழங்காலக் கதைகள் சொல்வதைக் கேட்டு வளர்ந்தோம்.”

மண்டேலாவின் மூதாதையர் புரிந்த அப்போர்களில் வெள்ளைப் படையெடுப்பாளர்களிடமும் அவர்களின் கூலிப்படைகளிடமும் துவக்குகளும் பீரங்கிகளும் இருந்தன. ஆப்பிரிக்கப் பழங்குடி வீரர்களிடம் ஈட்டியும் வேலும் வில் அம்பும்தான் இருந்தன. சூட்டுக் கருவிகள் ஏதும் இல்லை. இந்தச் சமனற்ற போரில் பழங்குடி வீரர்கள் குருதிக் களரியாக வீழ்ந்தார்கள். இந்தப் போக்கிற்கு மாறாக ஒரு போர்க்களத்தில் பழங்குடி வீரர்கள் வெற்றி கண்டார்கள். அதுதான் இசாந்திலவானா.

இசாந்திலவானா மலைக் குன்றில் 1879 சனவரி 22ஆம் நாள் பிரித்தானிய வல்லரசின் வல்லமை மிக்க பீரங்கிப் படையை வேலும் ஈட்டியும் ஏந்திய வெறுங்காலினரான ஆப்பிரிக்க வீரர்கள் தங்கள் மன்னர் செஸ்ட்வாயோ தலைமையில் தோற்கடித்தனர். அது ஒரு வகையான கரந்தடிப் போர்முறை. ஆப்பிரிக்க வீரர்கள் மலையுச்சியிலிருந்து சாரி சாரியாக விரைந்து இறங்கி வந்தனர். நெருங்கி நின்று சமர் புரிவதில் உலகப் புகழ் பெற்ற ஆங்கிலேயப் படையினர் மலையின் கீழிருந்து குண்டுமாரிப் பொழிந்தனர். ஆனால் ஆப்பிரிக்க வீரர்களின் அடுக்கடுக்கான பாய்ச்சலைத் தடுக்க முடியவில்லை. அவர்கள் நெருங்கி வந்து பீரங்கிப் படையினரைக் குழப்பத்தில் ஆழ்த்தி ஒவ்வொருவனாகக் குத்திச் சாய்த்தனர். 900 வெள்ளைப்படையினரும் அதே அளவில் அவர்களின் கூலிப் படசியினரும் மாண்டனர். எஞ்சியவர்கள் பின்வாங்கி ஓடினார்கள். பிரித்தானியாவின் போர் வரலாற்றில் இது மிகப் பெரும் தோல்வி! மறைந்தறியாத வெள்ளைப் பேரரசுச் சூரியன் சூலு நாட்டின் இசாந்திலவானா மலைக் குன்றில் மறைந்தான். பிரித்தானியப் பேரரசில் சூரியன் மறைந்த நாட்களுண்டு, குருதி வெள்ளம் பெருகாத நாள் மட்டும்தானில்லையாம்!

வெள்ளையர்கள் அடைந்த இந்த அவமானத் தோல்வியை ஒரே ஒரு வெள்ளையர் மகிழ்ந்து கொண்டாடினார். அப்போது இலண்டனில் வாழ்ந்து வந்த பிரெடெரிக் எங்கெல்ஸ்தான் அவர். குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலில் இசாந்திலவானா பற்றிய எங்கெல்சின் குறிப்பு காணக் கிடைக்கிறது. பிரித்தானியப் பேரரசின் உலகுதழுவிய ஆதிக்கமும் செல்வாக்கும் கொடுமுடி தொட்டிருந்த ஒரு காலத்தில் அதை எளிய மக்களின் வீரத்தாலும் ஈகத்தாலும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை இசாந்திலவானா கொடுத்தது என்பதே எங்கெல்சின் மட்டறிய மகிச்சிக்கு அடிப்படை.

சில ஆண்டுகள் முன்பு பெருங்காமநல்லூர் கைரேகைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறு பற்றி உசிலம்பட்டியில் பேசும் போது இசாந்திலவானாவின் வீர வரலாற்றை நினைவுகூர்ந்தேன்.

எங்கோ எட்டாத் தொலைவில் ஆப்பிரிக்கத் தேசத்து இசாந்திலவானா எங்கெல்சை இந்த அளவு ஈர்த்தது என்றால், ஆங்கிலேயக் கால்வாயின் அக்கரையில் பாரிஸ் நகரத் தொழிலாளர்கள் விண்ணைச் சாடிய போது அது ஏற்படுத்திய தாக்கம் எப்படி இருந்திருக்கும்?

தொடர்வேன்….

தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *