ராகுல் காந்தியை சந்திக்கிறாரா விஜய்? தவெக – காங்கிரஸ் உறவில் நடப்பது என்ன?
Politics

ராகுல் காந்தியை சந்திக்கிறாரா விஜய்? தவெக – காங்கிரஸ் உறவில் நடப்பது என்ன?

Oct 8, 2026

அக்டோபர் 10-ம் தேதி சென்னை வரும் ராகுல் காந்தியை விஜய் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. திரைமறைவில் நடக்கும் அரசியல் நகர்வுகள் குறித்த முழுமையான பின்னணி இங்கே:

காங்கிரஸை தள்ளி வைக்கும் தவெக

தவெக ஆட்சிக்கு வருவதற்கு காங்கிரஸ் அதிக ஆர்வம் காட்டி ஆதரவு தந்தது. தேர்தலுக்கு முன்பாகவே தவெகவுடன் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி விரும்பியதாகவும், சோனியா காந்தி அதற்குத் தடை விதித்ததாகவும் காங்கிரஸ் தரப்பில் பேசப்படுகிறது. ஆனால், விஜய் தரப்பிலோ காங்கிரஸை சற்று தள்ளியே வைத்துள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்ப்பதுடன், அவர்களுடன் பெரிய அளவில் தொடர்பிலும் இல்லை என்பதே தற்போதைய கள நிலவரம்.

பாஜகவுடன் இணக்கமா? தவெகவின் 2029 வியூகம்

பாஜகவுடன் இணக்கமாகச் செயல்படுவதே விஜய், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட வியூகக் குழுவின் திட்டமாக உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2029 தேர்தலில் கணிசமான எம்.பி.க்களைப் பெற்று, பாஜகவின் முழுமையான ஆதரவைப் பெறும் நோக்கில்தான் தவெக செயல்பட்டு வருகிறது. இதனால் காங்கிரஸ் மீது காட்டப்படும் பாராமுகத்தை ராகுல் காந்தியே உணரத் தொடங்கியுள்ளார். ஒருவேளை காங்கிரஸ், விசிக ஆதரவை வாபஸ் பெற்றாலும், பாமகவை வைத்து சமாளித்துவிடலாம் என்ற மனநிலையில் தவெக உள்ளது.

காங்கிரஸ் தலைவர்களின் தொடர் முயற்சிகள்

தவெகவுடன் ஒட்டாத உறவு நீடிப்பதால், காங்கிரஸ் தலைவர்களான மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் கடும் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். தவெக ஆதரவைக் கேட்பதற்கு முன்பாகவே முண்டியடித்து ஆதரவைத் தர வைத்தவர்கள் இவர்கள்தான். இதனால் விஜய்யிடம் எப்படியாவது ராகுலை சந்திக்கச் சம்மதம் வாங்க இவர்கள் தொடர்ந்து தூது விட்டும், தொடக்கத்தில் விஜய் தரப்பில் எந்த பதிலும் இல்லை.

டெல்லி போராட்டத்தின் போது இந்தக் குழப்பங்களை ராகுலிடம் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்தபோது, ஏற்கனவே கடுகடுப்பிலிருந்த ராகுல் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதையடுத்து, மாணிக்கம் தாகூரைத் தொடர்புகொண்டு தவெக தரப்பை சம்மதிக்க வைக்க ராகுல் அழுத்தம் கொடுத்துள்ளார்.

மோடியின் வருகையும் விஜய்யின் தயக்கமும்

அக்டோபர் 10-ம் தேதி ராகுல் காந்தி சென்னை வரும் நிலையில், அடுத்த நாளே பிரதமர் மோடியும் சென்னை வருகிறார். முந்தைய நாள் ராகுலைச் சந்தித்தால், அது மோடியைச் சந்திக்கும்போது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என விஜய் கருதுகிறார். டெல்லியில் நடந்த முதல் சந்திப்பில், ‘எங்களால் திமுகவை ஜெயிக்க முடியலை.. நீங்க எப்படி ஜெயிச்சீங்க’ என்று மோடி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், தன் மீது மோடிக்கு நல்ல அபிப்பிராயம் இருப்பதாக விஜய் நம்புகிறார்.

மேலும், கரூர் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ள நிலையில், டெல்லியின் பார்வையும் தமிழகத்தின் மீது கூர்மையாக உள்ளது. இதனால் பாஜகவுக்கு எதிராக எந்த ஒரு அரசியல் நகர்வையும் செய்ய விஜய் தயாராக இல்லை.

கடும் பிரயத்தனங்களுக்குப் பின் சம்மதம்?

பிரவீன் சக்ரவர்த்தியின் அழுத்தத்திற்குப் பிறகு, காங்கிரஸ் தரப்பு பல வழிகளில் தவெகவை அணுகியது. காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு அழைப்பது, டின்னர் மீட்டிங் ஏற்பாடு செய்வது எனப் பல திட்டங்கள் மறுக்கப்பட்டன. இறுதியாக, தென் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஒருவரின் உதவியுடன், உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, பட்டினப்பாக்கம் வீட்டில் மதிய விருந்தின்போது சந்திப்பு நடத்த விஜய் தரப்பில் தற்போது அரைகுறையாகச் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி காங்கிரஸ் தரப்புக்குச் சற்று ஆறுதல் அளித்தாலும், கடைசி நேரத்தில் யாராவது குறுக்கே புகுந்து சந்திப்பை கலைத்துவிடுவார்களோ என்ற படபடப்பிலேயே சத்தியமூர்த்தி பவன் வட்டாரம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *