தமிழக அமைச்சரவையின் ‘வெற்றித் தமிழகம்’ முதல் கூட்டம்! 436 திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் அதிரடி ஆலோசனை!
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதை அடுத்து, முதலமைச்சர் விஜய் (CM Vijay) தலைமையில் அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ‘வெற்றித் தமிழகம்’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்த பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து இக்கூட்டத்தில் மிக விரிவாக விவாதிக்கப்பட்டது.
“இளைஞர்கள், மகளிர் மற்றும் விவசாயிகள் மேம்பாடு!”
அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் (CTR Nirmalkumar) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் வெளியிட்ட முக்கிய விபரங்கள் இதோ:
“முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் வாக்குறுதிகளோடு சேர்த்து மொத்தம் 436 தொலைநோக்கு திட்டங்கள் குறித்து இந்த முதல் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மேம்பாடு, மகளிர் முன்னேற்றம், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.”
லஞ்சமில்லா ஆட்சி மற்றும் போதை இல்லாத தமிழகம்!
டாஸ்மாக் விவகாரம் மற்றும் அண்ணாமலையின் கடிதக் கசிவு போன்ற அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், இந்த அமைச்சரவை முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
நிர்வாகத் சீர்திருத்தம் குறித்துப் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் லஞ்சம் இல்லாத நல்லாட்சியை வழங்குவதே இந்த அரசின் முதன்மை இலக்கு ஆகும். அதேபோல், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையைத் தமிழ்நாட்டில் முற்றிலும் ஒழிக்க மிகக் கடுமையான நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் தீவிரமாக உள்ளார்” என்றார்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை!
அண்டை மாநிலமான கர்நாடகாவுடன் நிலவி வரும் நீர் மேலாண்மைப் பிரச்சினைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டும் விவகாரத்தில், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க அரசு சார்பில் அனைத்து விதமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு துறைக்கும் தொலைநோக்கு இலக்குகளை முதல்வர் வகுத்துக் கொடுத்துள்ளார் என்றும், அதை அமைச்சர்கள் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.
