மீண்டும் முதலிடத்தில் வந்தே மாதரம்! தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டதால் புதிய சர்ச்சை!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவை விரிவாக்க விழா இன்று காலை லோக் பவனில் நடைபெற்றது. இதில் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், இந்த விழாவில் பாடப்பட்ட பாடல்களின் வரிசை தற்போது புதிய அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தொடரும் வந்தே மாதரம் சர்ச்சை
முன்னதாக, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழா நடைபெற்றது. அந்த நிகழ்விலும் முதல் பாடலாக ‘வந்தே மாதரம்’ தேசிய கீதம் பாடப்பட்டது. இது அப்போதே சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று நடந்த அமைச்சரவை விரிவாக்க விழாவிலும் அதே நடைமுறை தொடர்ந்தது. இன்றைய விழாவிலும் முதல் பாடலாக ‘வந்தே மாதரம்’ பாடப்பட்டது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
3வது இடத்திற்குத் தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து
வழக்கமாகத் தமிழக அரசு விழாக்களில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதன்மையாகப் பாடப்படும். அதுவே நீண்டகால மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைய தவெக அரசின் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டது. அதன் பின்னர் அமைச்சர்கள் பதவியேற்பு உறுதிமொழி நடைபெற்றது. அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. மாநிலத்தின் அலுவல் பூர்வ வாழ்த்துப் பாடல் பின்னுக்குத் தள்ளப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் களத்தில் கிளம்பும் விவாதங்கள்
தவெக அரசு வேண்டுமென்றே மாநில மரபுகளை மாற்றுகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தேசிய ஒருமைப்பாட்டைக் காட்டுவதற்காக வந்தே மாதரத்திற்கு முதலிடம் தரப்படுவதாக ஒரு தரப்பு கூறுகிறது.
ஆனால், தமிழ்நாட்டின் அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்தை 3வது இடத்திற்குத் தள்ளியது தவறு என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. புதிய அமைச்சர்கள் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே, இந்த பாடல் சர்ச்சை இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
