
பெரியார் மாட்டிக் கொண்டாரா? சீமான் கருத்துக்கு தோழர் தியாகுவின் பதில் தொடர்!
தந்தை பெரியார் கருத்துகள் மீது தாராளமாக விவாதம் செய்யலாம். அதற்கு முன் சீமான் பரப்பிய அவதூறுக்குத் தீர்வு கண்டாக வேண்டும்.
“உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் யாருடனும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னார் என்று சீமான் கூறியதற்கு அவராக இது வரை சான்று ஏதும் தரவில்லை. பெரியார் எங்கே எப்போது இப்படி சொன்னார் அல்லது எழுதினார்? என்ற கேள்விக்கு அவர் நேராக விடை சொல்லவில்லை. அவர் சார்பில் அவரிடம் அதிகாரம் பெற்று யாரும் இந்த வினாவிற்கு விடையளிக்கவும் இல்லை.
சீமான் பேசியதற்கு நாங்கள் தருகிறோம் சான்று என்று முன்வந்திருப்பவர்கள் சில சான்றுகள் (?) தந்துள்ளார்கள். இவை உண்மையிலேயே சான்றுகள் தானா? என்று பார்க்க வேண்டும்.
முதலில் 5 நாள் முன்பு முகநூலில் எனக்கும் தமிழ் மன்றம் என்கிற ஒருவருக்கும் நடந்த உரையாடலை அன்பர்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன். பெரியார் பற்றிய சீமான் பேச்சுக்கு சான்று தந்து விட்டால்? என்று அவர் கேட்க, தந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விடையளித்தேன். அவர் உடனே ஒரு ’சான்று’ கொடுத்தார்.
அது ஒரு புத்தகத்தின் ஒரு பக்கம். புத்தகத்தை எழுதியவர் செந்தில் மள்ளர் என்று அதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
செந்தில் மள்ளர் பெரியாரிடமிருந்து மேற்கோளாகக் காட்டியுள்ள கூற்றும் சீமான் பெரியார் மேற்கோள் என்று சொல்லியிருப்பதும் ஒன்றே,
அப்படியானால் சீமான் சொன்னது உண்ன்மைதான் என்றாகி விடும். ஆனால் சீமான் இந்தச் சான்றைக் காட்டாமல் பெரியார் எழுத்தையும் பேச்சையும் நாட்டுடைமையாக்கினால் சான்று காட்டுவதாகச் சொன்னது ஏன்? செந்தில் மள்ளர் எழுதியதை சீமான் அறியவில்லையா? அல்லது நம்பவில்லையா?
செந்தில் மள்ளர் 11.05.1953 விடுதலையை சான்றாகக் காட்டியுள்ளார். செந்தில் மள்ளருக்குக் கிடைத்த இந்த விடுதலை ஏடு சீமானுக்குக் கிடைக்கவில்லையா?
இந்தப் புதிருக்கு விடை காண வேண்டும் எனக் கருதுகிறேன்.
செந்தில் மள்ளரின் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை முகநூலில் ‘தமிழ் மன்றம்’ எடுத்துக்காட்டியுள்ளார். இந்த முழுப் புத்தகத்தையும் அவரே எனக்கு அனுப்பினால் உதவியாக இருக்கும். சீமான் நம்பவில்லை என்றாலும் அந்தப் புத்தகத்தை நான் படிக்க விரும்புகிறேன். பெரியார் குறித்து என்னவெல்லாம் சொல்லப்பட்டுள்ளது என்று தெரிந்தால் உதவியாக இருக்கும்.
இரண்டாவதாக குறிப்பிட்ட அந்த 11.05.1953 விடுதலை ஏட்டையும் முழுமையாகப் பார்க்க விரும்புகிறேன்.
உண்மையிலேயே அந்த விடுதலை ஏட்டில் அப்படி ஒரு பெரியார் பேச்சு வந்திருந்தால் தமிழ் மன்றம் (அல்லது செந்தில் மள்ளர்) சான்று காட்டி விட்டார் என்பதை ஒப்புக் கொண்டு கையைத் தூக்கி விடுகிறேன்.
அதற்குப் பிறகு பெரியார் கருத்துக்ள் பற்றிய விவாதத்தை வைத்துக் கொள்வோம்.
அன்பர்கள் அருள்கூர்ந்து செந்தில் மள்ளர் புத்தகத்தையும் 11.05.1953 விடுதலை ஏட்டின் பக்கங்களையும் எனக்கு அனுப்பி உதவுங்கள்.
தொடரும்…..
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்