
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (18)
[இந்த இடுகைத் தொடரில் தவிர்க்கவிய்லாத பணிகளால் சற்றே நீண்ட இடைவெளி விழுந்தமைக்காக வருந்துகிறேன். எதிர்காலத்தில் இவ்வளவு நீண்ட இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன்.]
மார்க்சியத்தின் வல்லமை குறித்தும், அதன் வரலாற்று வழிப்பட்ட வரம்புகள் குறித்தும், ஏனைய புரட்சியக் கொள்கைகளுடன் அதற்குள்ள உறவு குறித்தும் என் பார்வைகளில் மாற்றமில்லை என்று ஒரே வரியில் சொல்லி விட்டுப் போக நான் விரும்பவில்லை.
தோழர் வேலனும் தோழர் சண்முக சுந்தரமும் (Pcp) இந்த உரையாடலில் பங்கேற்றிருப்பதை வரவேற்கிறேன். அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டங்களை சென்ற இடுகையில் அப்படியே எடுத்துக்காட்டியிருந்தேன். மார்க்சியத் திறனாய்வு முறைமைக்கு எவ்வித ”உதிரிக் கோட்பாடுகளும்” தேவையில்லை என்கிறார் தோழர் வேலன். எந்த அறிஞர்களின் துணையும் தேஎவையில்லை, குறிப்பாக முதலாளித்துவச் சமூகச் சிந்தனை கொண்ட, அல்லது சீர்திருத்தவாதச் சிந்தனை கொண்ட கருத்தாக்கங்கள் சாதியை வெளிப்படுத்த முடியாது என்கிறார். அவ்வாறு நான் கருதுவதானால் அதன் பெயர் மார்க்சியத் திறனாய்வு அல்ல என்கிறார். மார்க்சியம் வெளிப்படுத்துகின்ற மூன்று தத்துவக் கூறுகள் போதுமானவை என்றும், அதுவே ”மொத்தத்துவக் கோட்பாடாகவும் சகல நிவாரணியாகவும்” அமையும் என்றும் அறுதியிட்டுரைக்கிறார்.
சாதியை வெளிப்படுத்த மார்க்சியமே போதும், பெரியாரோ அம்பேத்கரோ தேவையில்லை என்றும், அவர்களும் தேவை என்று நான் கருதுவது மார்க்சியத் திறனாய்வு ஆகாது என்றும் தோழர் வேலன் கருதுவதாக நான் புரிந்து கொள்கிறேன். முதலாளித்துவ சமூகச் சிந்தனை என்றும், சீர்த்திருத்தவாதச் சிந்தனை என்றும் பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளைத்தான் அவர் சொல்கிறார் போலும்.
மார்க்சியம் என்பது இயற்கை இயங்கியல் என்றும் வரலாற்று பொருள்முதல்வாதம் என்றும், முரண் தருக்கப் பொருள்முதல்வாதம் என்றும் உணர்ந்திருப்பதாகத் தோழர் சண்முகசுந்தரம் சொல்கிறார். இது புரிகிறது. எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே என்றும் கார்ல் மார்க்ஸ் அறுதியிட்டுச் சொல்வதாகச் சொல்கிறார். இதுவும் புரிகிறது. ஆனால் “மற்ற கருத்துகளைப் போல இதைக் கருத்தளவில் கருத்தாகப் பார்ப்பது என்பதைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்று அவர் சொல்வது மட்டும் புரியவில்லை. போகட்டும்.
”சில சூழல்களில்… மார்க்சியக் கருவி போதாமற் போவதுமுண்டு” என்று நான் கூறியதைத் தோழர் சண்முகசுந்தரத்தால் ஏற்க முடியவில்லை. போதாமை (inadequacy) இல்லாத அறிவியல் கோட்பாடு எதுவுமில்லை. இது இயங்கியல் போதாமை (dialectical inadequacy). எல்லாக் காலத்துக்கும் எல்லாச் சூழலுக்குமான அறுதிப் பொருத்தப்பாடு கொண்ட கோட்பாடு எதுவுமில்லை என்பதுதான் மார்க்சிய இயங்கியல். இந்த மார்க்சிய இயங்கியல் மார்க்சியத்துக்கும் பொருந்தும்.
இயற்கை அறிவியல் ஆனாலும் குமுக (சமூக) அறிவியல் ஆனாலும், அறிவியல் முன்னேற்றம் என்பதே போதாமைகளை வென்று மேற்செல்லும் முடிவில்லாத முன்னேற்றம்தான். மார்க்சியம் வெல்ல வேண்டிய போதாமை எதுவும் இல்லை என்ற பார்வை மார்க்சியத்தை வேதமாகப் பார்ப்பதாகி விடும். வேதம் என்பது செத்த எழுத்து. மார்க்சியம் உயிரோட்டமுள்ள சிந்தனை. அது தன் போதாமைகளை அறிந்தேற்று அவற்றை வென்று முன்னேறி வருவதன் வெளிப்பாடுதான் இலெனின், மாவோ, ஹோசிமின், சே குவேரா… என்று தொடர்ந்து வரும் சிந்தனை மரபு.
இவர்களெல்லாம் மார்க்சியச் சிந்தனை மரபில் வந்தவர்கள். ஆனால் மார்க்சியச் சிந்தனைக்குப் புறத்திருந்து வரும் சிந்தனைகளை இதே போல் அறிந்தேற்க முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம். மார்க்சியத்துக்குப் புறத்திருந்தான இந்தச் சிந்தனைகளைத்தான் ”உதிரிக் கோட்பாடுகள்” என்று தோழர் வேலன் கருதுவதாகப் புரிந்து கொள்கிறேன். மார்க்சியமல்லாத முற்போக்குச் சிந்தனைகள் என்பதில் மார்க்சியத்துக்கு முற்பட்டவையும், மார்க்சியத்தோடு சம காலத்தவையும், மார்க்சியத்துக்குப் பிற்பட்டவையும் உண்டு.
மார்க்சியத்தின் வருகையோடு மாந்தக் குல வரலாறு தொடங்கவில்லை என்பதை மறந்து விடாதீர்கள். மார்க்சியம் உலக அரங்கில் வருமுன்பே குமுகம் இயங்கிக் கொண்டிருந்தது. இந்த இயக்கத்துக்கு வடிவம் கொடுத்துத் துணைநின்று ஊக்கமளித்த சிந்தனைகள் தோன்றி வளர்ந்தன. சொல் வடிவிலும் செயல் வடிவிலும் இந்தச் சிந்தனைகளை வெளிப்படுத்திய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், சீர்திருத்தக்காரர்கள், புரட்சிக்காரர்கள் இருந்தார்கள். இவர்களை உதிரிச் செயல்பாட்டாளர்களாகவோ இவர்களின் கருத்துகளை உதிரிக் கோட்பாடுகளாகவோதான் மார்க்சியம் கருதியதா?
ஸ்பார்ட்டகஸ், பொலிவர், ஹொசே மார்த்தி, சன் யாட்சென்… இவர்களைப் பற்றித் தெரியுமா? அடுத்தடுத்துப் பார்ப்போம்.
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்