பஹல்காம் பரிதாபம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை!
Tamilnadu

பஹல்காம் பரிதாபம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை!

Apr 23, 2025

சென்னை: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தி உள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் சவுதிஅரேபிய பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா திருப்பினார். டெல்லி விமான நிலையத்தில் காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்துகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இவர்கள் எப்படி இந்த தாக்குதலை திட்டமிட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேரின் வரைபடம் வெளியாகியுள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் விவரங்களும் தெரியவந்துள்ளது. அவர்களது உடல்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. “இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் எடுப்பார்கள்” என்று உறுதியளித்து உள்ளார் அமித் ஷா.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “காஷ்மீரில் நடந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது என்பதைத்தான் இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது.

அங்கு பயங்கரவாதமே இல்லை.. சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாகப் பயணிக்கலாம் என்ற பாஜக அரசின் கூற்றை நம்பிச் சென்றவர்கள் இன்று படுகொலையாகி உள்ளனர். எனவே, தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

 

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *