பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான்-சீனா விசாரணை கோரிக்கை சர்ச்சை கிளப்பியது
World

பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான்-சீனா விசாரணை கோரிக்கை சர்ச்சை கிளப்பியது

Apr 28, 2025

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியா தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. இதில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் அல்லது சீனா இந்த விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் தீவிரவாதிகள் மிக மோசமான நாசவேலையில் ஈடுபட்டனர். அப்பாவி மக்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.


பாகிஸ்தான் சர்ச்சை


இதற்கிடையே ரஷ்ய அரசு ஊடகமான ஆர்ஐஏ நோவோஸ்டி என்ற செய்தி நிறுவனத்திற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் அவர் பஹல்காம் தாக்குதல் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் அல்லது சீனா இந்த விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்த விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும். ரஷ்யா அல்லது சீனா அல்லது மேற்கத்திய நாடுகள் விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதற்காக அவர்கள் ஒரு விசாரணைக் குழுவை அமைக்கலாம். இந்தியா அல்லது பிரதமர் மோடி உண்மையைச் சொல்கிறாரா இல்லை பொய் சொல்கிறாரா என்பதை விசாரிக்க வேண்டும். சர்வதேச குழு அமைத்து உண்மையைக் கண்டுபிடிக்கட்டும்.


ஆதாரம் இல்லை


இந்தியாவில் காஷ்மீரில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்கச் சர்வதேச விசாரணை தேவை. வெறும் பேச்சு அல்லது வெற்று அறிக்கைகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. இந்தச் சம்பவத்தில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருக்கிறதா அல்லது இந்தத் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்திருந்திருந்தால் அதற்குச் சில ஆதாரங்கள் இருக்க வேண்டும். ஆனால், ஆதாரத்தைத் தராமல் சும்மா பேசிக் கொண்டு இருக்கிறார். அதில் வேறு எதுவும் இல்லை” என்றார்.


முன்னுக்கு பின் முரண்


பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இதுபோல சொன்னாலும் கூட பாகிஸ்தானுக்கு இதில் தொடர்பு இருக்கும் என்றே சந்தேகிக்கப்படுகிறது. ஏனென்றால் தாக்குதல் நடந்த பிறகு இரு முக்கிய பாகிஸ்தான் அமைச்சர்கள் கூறிய கருத்துகள் முன்னுக்கு முன் முரணாகவே இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர் ஆண்ட்ரூ கோரிப்கோ தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக கோரிப்கோ மேலும் கூறுகையில், “பாகிஸ்தான் துணைப் பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும் இருப்பவர் இஷாக் தார். இவர் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் தாக்குதல்களை நடத்தியவர்கள் சுதந்திரப் போராளிகளாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். காஷ்மீர் விவகாரத்தில் ஒருவரது கருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சுற்றுலாப் பயணிகளைப் படுகொலை செய்வது பயங்கரவாதச் செயல்.


சர்ச்சை பேச்சுகள்


அவர்களின் மதத்தின் குறிப்பிடத் தேவையில்லை. அதேநேரம் குற்றவாளிகளைச் சுதந்திரப் போராளிகளாக இருக்கலாம் என சொல்வது உலகெங்கிலும் உள்ள உண்மையான சுதந்திரப் போராளிகளை இழிவுபடுத்துகிறது. இது பயங்கரவாதத்தை மறைமுகமாக நியாயப்படுத்துகிறது. அதேபோல அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறிய கருத்தையும் நாம் கவனிக்க வேண்டும். பஹல்காம் தாக்குதல் ஒரு தவறாகிப் போன ஆப்ரேஷனாக இருக்கலாம் என அவர் கூறியிருந்தார்.


இவர்களின் இந்தப் பேச்சுகளைக் கவனித்தால் உங்களுக்கே புரியும். அதில் முரணான கருத்துகள் உள்ளன. குறிப்பாகத் தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிக்கும் வகையிலான கருத்துகளாகவே இவை உள்ளன” என்றார்.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *