என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?
தலையங்கம்

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?

Jun 21, 2025

மானமுள்ள தமிழினமே வீதியில் இறங்கி போராடு, உரிமையை இழக்காதே… !

ஒரு காலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் (contract labour), சொசைட்டி ஊழியர்கள் (society labour), நிரந்தர நிறுவன தொழிலாளர்கள் ( Permanent Employ) என பிரித்துப் பார்த்த காலம் மறைந்து இன்றைக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மத்தியிலும் நவீன பார்ப்பனிய புத்தி வந்துவிட்டது. இதனால் தீண்டாமை நுழைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும் !

Nlc India நிறுவனத்தில் அதிகாரிகளுக்கு மட்டும் தனி சீருடை கேட்டு நிர்வாகத்திடம் வலியுறுத்தப்படுகிறது, என செய்தி அறிந்து பதறிப் போனோம்! நிரந்தர தொழிலாளிக்கு ஒரு சீருடையும் அதிகாரிகளுக்கு வேறு சீருடையும் கேட்கிறார்களாம்…. ! அருமையாக இல்லையா கேட்பதற்கே ?!

இது எந்த மாதிரியான மனநிலை என்பது தெரியவில்லை! ஆனால் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் இந்த பாகுபாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது என்பதை நமது #சூழலில்பாதுகாப்புகூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கிடைத்த தகவல்கள் ஒரு சில :

Neyveli guest house – ஐ பொறுத்தவரை எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் என்எல்சியின் நிரந்தர தொழிலாளி தனக்கோ தன் உறவினர்களுக்கோ இங்கு அறை எடுத்து தங்க முடியாது , ஆனால் ஒரு அதிகாரி நினைத்தால் தங்க முடியும். அதிகாரி கையெழுத்து இட்டு கொடுத்தால் மட்டுமே ரூம் வழங்கப்படுகிறது. நவீன அர்ச்சனை சீட்டு முறை தான். நிரந்தர தொழிலாளிக்கு அந்த சலுகை கிடையாது. என்ன தான் மனிதர்களாக இருந்தாலும் குடுமியும் பூணூலும் தானே சலுகை பெறுகிறது. இங்கே அதை கொஞ்சம் பொருத்தி பார்க்க வேண்டும்!

அதிகாரிகள் கார் நிறுத்தமிடம் வேறு தொழிலாளிகள் கார் நிறுத்தும் இடம் வேறு, அதிகாரிகள் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் வேறு தொழிலாளிகள் இருசக்கர வாகனம் நிறுத்தமிடும் வேறு. அதாவது ஒரு காலத்தில் இது பார்ப்பனர்கள் சாப்பிடும் இடம், பார்ப்பனர் அல்லாதார் சாப்பிடும் இடம் என்று இருந்தது இல்லையா, அது போல தான் !

அதிகாரிகள் வேலைக்கு செல்லுகிற போது கார்டு பஞ்சடிக்கும் இடம் வேறு தொழிலாளிகள் கார்டு பஞ்சடிக்கும் இடம் வேறு! இருவருக்கும் தனித்தனியாக பிரிந்து வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு ஒரு டீ வழங்கப்படுகிறது, ஆனால் அதிகாரிக்கு ஒரு நாளைக்கு நான்கு ஸ்பெஷல் டீ, மற்றும் சிற்றுண்டி (special tea & snacks) வாழங்கப்படுகிறது, ஒரே மாதிரியான நிலைமை அங்கும் இல்லை!

ஏன் ஒரு அதிகாரியின் வீட்டு திருமண நிகழ்வுக்கு சென்று இருந்தேன், அது அவர் தனிப்பட்ட நிகழ்வு என்றாலும் கூட அதிகாரி உணவு அருந்தும் இடம் தனியாகவும், தொழிலாளி உணவு அருந்தும் இடம் தனியாகவும், உயர் அதிகாரிகள் உணவு அருந்தும் இடம் வேராகவும் இருந்தது! கொடுமை !

சைவம், அசைவம் என்று தான் பிரித்து இருப்பார்கள் ஆனால் இங்கு நிலைமை அப்படி அல்ல, நான்கைந்து பந்திகள் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டு இருக்கிறது இது என்ன நவீன தீண்டாமையோ என என்ன தோன்றியது ! அவர்களும் தன்னை பார்ப்பனர்கள் போல பாவித்து வருகின்றனர் !

ஒரு தொழிலாளிக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் என்எல்சி மருத்துவக் குழு சொல்லுகிற மருத்துவமனைக்கு சென்று தான் சிகிச்சை எடுக்க வேண்டுமாம், அவர்கள் எங்கு சிகிச்சை எடுக்க வேண்டும், அவருக்கு எந்த ஊரில் உறவினர்கள் பக்கத்தில் இருக்கிறார்கள் எந்த இடம் அவருக்கு அருகில் இருக்கிறது என்பதை எல்லாம் அவர்கள் முடிவு செய்ய முடியாது! என்எல்சி மருத்துவக் குழு என்ன சொல்லுகிறதோ அதைத்தான் கேட்க வேண்டும் அவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனையை மட்டும் பரிந்துரைக்கிறார்கள். இந்த நிலை நிரந்தர தொழிலாளிகளுக்கு மட்டும்தான், அதிகாரிகளுக்கு கிடையாது.

housekeeping என்கிற பெயரில் ஒப்பந்த ஊழியர்கள் மருத்துவமனையில் வேலை செய்ய சொல்லி பயன்படுத்துகிறார்கள்.

ஒப்பந்த ஊழியர்கள், சொசைட்டி ஊழியர்கள் மட்டும் வெளியே போகிறபோது கையெழுத்திட வேண்டுமாம், அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் உள்ளே செல்லலாம் வெளியே வரலாம் இது என்ன கொடுமை. அவர்களுக்கு கையெழுத்து கிடையாது நிரந்தர பணியில் உள்ளவர்களை அனைவரையும் ஒரே மாதிரி பார்வையில் பார்க்க வேண்டும்.

அதிகாரிகள் பயணிக்க கூடிய பஸ்ஸில் நிரந்தர தொழிலாளிகள் பயணிக்க கூடாதாம், தொழிலாளி தான் பஸ்சை ஓட்டுகிறார் ஆனால் அது அதிகாரி பஸ்சாம், என்ன கொடுமடா ?!

ஓய்வு பெற்ற நிரந்தர ஊழியருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய், ஆனால் அதிகாரிக்கு 16 லட்சம் ரூபாயாக உள்ளது இது என்ன மாற்றான் தாய் மனப்பான்மை !

இங்கு அதிகாரியாக பணியாற்றியவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் சிப்காட் அமைத்து அதில் தொழில் நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்எல்சிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அவர்களே சப்ளை செய்கிறார்கள் !?

நாங்கள் அதிகாரி! நாங்கள் அதிகாரி! என தம்பட்டம் அடித்துக் கொண்டு எல்லா இடத்திலும் வேறுபாடு கேட்கிறீர்களே. நீங்கள் இறந்ததற்கு பின்னால் வட்டம் ஐந்தில் உள்ள சுடுகாட்டில் தானே உங்களை எரிக்கிறார்கள் ? உங்களுக்கு ஏன் தனி சுடுகாடு கேட்கக்கூடாது ? அதில் உங்கள் எச்சியூடிவ் என்று சொல்லக்கூடிய அதிகாரிகளே ஏன் வேலையாட்களாக இருக்கக் கூடாது ? என்கிற கேள்விதான் எங்களுக்கு எழுகிறது !

தொடரும் இப்படிப்பட்ட நவீன தீண்டாமை வேற்றுமையை களைய தமிழ் சமூகம் வீதிக்கு வந்து போராட வேண்டும்.

தேநீர் குடிப்பதாக இருந்தால் எல்லோருக்கும் ஒரே அளவாக இருக்க வேண்டும் -#பெரியார்

ஒரே மாதிரியான சுவை இருக்க வேண்டும் -#மார்க்ஸ்

ஒரே மாதிரியான கோப்பையாக இருக்க வேண்டும் -#அம்பேத்கர்

முனைவர் அன்பு திராவிடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சூழலியல் பாதுகாப்பு கூட்டமைப்பு.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *