தமிழ்நாடு நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு நாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத் தீர்மானத்தை நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், 1956-ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும், இந்த நிலம் ‘Madras State’ என்ற பெயரிலேயே தொடர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெயரை மாற்ற பல்வேறு முயற்சிகள், தீர்மானங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றாலும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா, சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை அறிவித்த வரலாற்று தருணத்தை நினைவுகூர்ந்துள்ளார்.
அண்ணா அவையில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை முழங்கியபோது, மாநில மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் ‘வாழ்க’ என்று முழங்கி வரவேற்றனர் என்றும், அந்த வரலாற்று நாளே இன்று ‘தமிழ்நாடு நாள்’ எனக் கொண்டாடப்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தாயின் ஏக்கத்தை தீர்த்த பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சாதனையை என்றும் போற்றுவோம் என்றும், தமிழ்நாடு நாளையொட்டி அனைவருக்கும் தனது வாழ்த்துகளை மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
