மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
Opinion

மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

Feb 4, 2025

மார்க்சியம் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்கும் போதெல்லாம், கார்ல் மார்க்ஸ் கல்லறையருகே பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் எடுத்துக் காட்டுவேன். இந்த உரையில் மார்க்சின் இரு கண்டுபிடிப்புகளை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டுவார். அவற்றில் ஒன்று: மாந்தக் குமுகத்தின் வரலாற்று வளர்ச்சி நெறி (the law of the historical development of human society). வழக்கமாகச் சொல்வது போல் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சி விதி. (மற்றொன்று முதலிய [முதலாளித்துவ] அமைப்பின் இயக்கு விசையாக இருக்கும் மிகைமதிப்புக் கோட்பாடு, ஈண்டு அதை மறந்து விடுவோம்).

”எப்படி உயிரியற்கையின் வளர்ச்சி நெறியை டார்வின் கண்டுபிடித்தாரோ, அதே போல் மாந்த வரலாற்றின் வளர்ச்சி நெறியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்: ஓர் எளிய உண்மை இதுவரை கருத்தியலின் மிகை வளர்ச்சியால் மறைக்கப்பட்டிருந்தது; அந்த உண்மை என்னவென்றால், மாந்தக் குலத்திற்கு அனைத்துக்கும் முன்னதாக உண்ண உணவும் பருக நீரும் இருக்க வீடும் உடுத்த உடையும் தேவை, அதற்குப் பிறகுதான் அது அரசியல், அறிவியல், கலை, சமயம் போன்றவற்றில் ஈடுபட முடியும். ஆகவே நேரான பொருண்மியப் பொறிகளின் ஆக்கமும், ஆதலால் குறித்த ஊழியில் அல்லது குறித்த மக்களினம் அடைந்துள்ள பொருளியல் வளர்ச்சிப் படிநிலையுமே அடித்தளமாக அமைந்து அந்த அடித்தளத்தின் மீதுதான் அம்மக்களினத்தின் அரசு நிறுவனங்களும் சட்டக் கருத்தாக்கங்களும், ஏன், சமயம் பற்றிய எண்ணங்களும் கூட உருப்பெற்றுள்ளன; அந்த அடித்தளத்தின் ஒளியில்தான் இவற்றுக்கு விளக்கமளித்தாக வேண்டும்; இதுவரை இதற்கு நேர்மாறாகவே நடந்துள்ளது.”

“Just as Darwin discovered the law of development of organic nature, so Marx discovered the law of development of human history: the simple fact, hitherto concealed by an overgrowth of ideology, that mankind must first of all eat, drink, have shelter and clothing, before it can pursue politics, science, art, religion, etc.; that therefore the production of the immediate material means, and consequently the degree of economic development attained by a given people or during a given epoch, form the foundation upon which the state institutions, the legal conceptions, art, and even the ideas on religion, of the people concerned have been evolved, and in the light of which they must, therefore, be explained, instead of vice versa, as had hitherto been the case.”

இந்த அடிப்படைக் கோட்பாட்டைப் படித்து – மீண்டும் மீண்டும் படித்து – ஆழப் புரிந்து எடுத்துக்காட்டுகளோடு தெளிவாக உள்வாங்கிக் கொள்ளுங்கள். உலகம் உங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாகி விடும். என் தமிழ் உங்கள் புரிதலுக்குத் தடையாகி விடக் கூடாது என்ற கவலை எனக்குண்டு. நமக்கு முதலில் மார்க்சியத்தை அறியத் தந்தவர்கள் உற்பத்தி என்றார்கள், நான் ஆக்கம் என்கிறேன். Means of production – ஆக்கப் பொறிகள். இப்படி இன்னும் சில. முயன்றால் பழகிக் கொள்ளலாம்.

இந்த அடிப்படைக் கோட்பாடுதான் வரலாற்றுப் பொருண்மியம் (historical materialism – வரலாற்றுப் பொருள்முதல் வாதம்) என்ற மெய்யியலின் ஊடிழை. இந்தப் புரிதலோடுதான் பெரியாரின் ”உறவு முறை”யை விளங்கிக் கொள்ள முடியும். ஆக்கம் (உற்பத்தி) என்பது பொருள்-ஆக்கம் மட்டுமன்று. பொருளாக்கம் செய்யவே மாந்தர்கள் தேவை. எனவே ஆக்கம் என்பதில் மாந்த-ஆக்கமும் ஒரு கூறு. பொருள்களையும் மாந்தர்களையும் ஒரு முறை ஆக்கினால் போதாது. தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஆக்க வேண்டும். ஆகவே பொருள்களையும் மாந்தர்களையும் ஆக்கமும் மீளாக்கமும் செய்வதுதான் (production and reproduction of men and matter) குமுக வளர்ச்சி வரலாற்றைத் தீர்மானிக்கிறது. எப்படி வயல்களிலும் ஆலைகளிலும் பொருளாக்கமும் மீள் பொருளாக்கமும் நடைபெறுகிறதோ, அதே போல் மாந்த ஆக்கமும் மீளாக்கமும் குடும்ப அமைப்பில் நடைபெறுகின்றன.

ஆக, குடும்ப அமைப்பிலான மாற்றங்கள் குமுக அமைப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு இணையாக அமைகின்றன. குமுக வளர்ச்சிக்கும் குடும்ப வளர்ச்சிக்குமான இடையுறவைக் கொச்சையாக அல்லாமல் இயங்கியலாகப் புரிந்து கொள்ளும் எச்சரிக்கை தேவை. பொருளியல் அடித்தளம் மட்டுமல்ல, அரசியல், கலை இலக்கியம், சட்டம் போன்ற கருத்தியல் கூறுகளுக்கும் குடும்ப அமைப்பின் வளர்ச்சி வரலாற்றில் பங்குண்டு. குடும்பம் (இல்லறம்) பொதுவாகத் திருமணத்தில் தொடங்குவதால் குடும்ப அமைப்பின் வரலாற்றில் திருமண முறைகள் முகன்மைப் பங்கு வகிக்கின்றன.

சென்ற இடுகையில் நான் சுட்டிய அந்த இரு நூல்களும் குடும்பங்கள், மண முறைகளின் வரலாற்றை வரைகின்றன. எங்கெல்ஸ் நூலின் எளிய கதை வடிவம்தான் இராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய ”வால்கா முதல் கங்கை வரை”. படியுங்கள். தாய், அக்காள் தங்கை, மகள் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காத வரைமுரையற்ற பாலுறவிலிருந்துதான் மாந்தக் குலம் தொடங்கிற்று, நாமும்தான்! இதற்கு நீங்கள் பெரியாரைப் பொறுப்பாக்க முடியாது!

நம் மூதாதையர் மனிதக் கறி தின்றிருக்கக் கூடும் (சிறுத் தொண்ட நாயனார் பிள்ளைக் கறி படைத்த கதை எப்படி?) என்றால், நம் மூதாதையர் வரைமுறையற்ற பாலுறவில் ஈடுபட்டிருக்கவும் கூடும். இது ஒழுக்கம்தானா? என்று கேளற்க. இதுதான் அன்றைய ஒழுக்கமே! என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

இதைத்தான் ”உறவு முறை”யில் தந்தை பெரியாரும் ஏதோ ஒரு வகையில் சொல்ல முற்படுகிறார். இதைப் புரிந்து கொண்டால் சீமான் எந்தப் புரிதலும் இல்லாமல் பெரியாரைப் பழி தூற்றுவதற்காகக் கரடி விடுகிறார் என்பது தெரிந்து விடும். அவர் கிடக்கட்டும், அவர் வாய்க்கு வந்த படி பேசுவதற்கெல்லாம் எப்படியாவது சப்பை கட்ட வேண்டும் என்று ”சமயோசித” வாதம் புரிகிறவர்கள் உண்மையை விளங்கிக் கொண்டு வருந்துங்கள், திருந்துங்கள்!

பெரியார் பெருமலை! சுண்டெலிகள் வளை துளைக்க வேறிடம் பாருங்கள்!

தொடர்கிறேன்…

தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *