”மார்க்சியம் மந்திரக் கோலன்று. மார்க்சியர்கள் மந்திரவாதிகளும் அல்லர். மார்க்சியம் உலக அரங்கில் வருகை தருமுன்பே மாந்த குலம் போராட்டங்களையும் புரட்சிகளையும் நடத்திக் கொண்டுதான் இருந்தது. பார்க்கப் போனால் அந்தப் போராட்டங்களின் இயங்கியல் தொடர்ச்சியாகவே மார்க்சியம் மலர்ந்தது. மார்க்சியம் அனைத்து நோய்களுக்குமான அறுதி மருந்தன்று. சர்வரோக சஞ்சீவி எதுவும் இல்லை.
//”அறிஞர்கள் உலகை விளக்கிக் கொண்டிருந்த போது உலகை மாற்றுவதே குறி என்று மார்க்சியம் சாற்றியது. குமுகத்தை விளங்கிக் கொள்ளவும் மாற்றியமைக்கவும் மிகச் சிறந்த கருவி மார்க்சியம். சில சூழல்களில் இந்தக் கருவி போதாமற்போவதும் உண்டு.
//”இந்தியாவில் சாதிய அமைப்பை முழுமையாக விளங்கிக் கொள்ள மார்க்சியம் போதுமானதன்று. மார்க்சிய அடிப்படை மீது ஜோதிராவ் புலே, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட அறிஞர்களையும் துணைக் கோடல் வேண்டும். சாதியமைப்பை விளங்கிக் கொள்வதற்கு மட்டுமன்று, அதனை மாற்றியமைக்கவும் கூட இத்தனைச் சிந்தனை மரபுகளும் நமக்குத் தேவைப்படுகின்றன.”
மார்க்சிய மாணவனாகிய நான் சென்ற இடுகையில் மார்க்சியம் குறித்து மேற்கண்டவாறு சில பார்வைகளை முன்வைத்திருந்தேன். இது குறித்து மார்க்சியத்தின் மீது உணர்ச்சி சார்ந்த காதலுடன் சில தோழர்கள் மாறுபாடு தெரிவித்துள்ளார்கள். தோழர் வேலன் எழுதியுள்ள பின்னூட்டம் இது:
// மார்க்சிச திறனாய்வு முறைமைக்கு எவ்விதமான உதிரி கோட்பாடுகளும் தேவையற்றது, அதேபோல எந்த அறிஞர்களும் துணையும் தேவையில்லை, குறிப்பாக முதலாளித்துவ சமூக சிந்தனையை கொண்ட, அல்லது சீர்திருத்தவாத சிந்தனை கொண்ட கருத்தாக்கங்கள் சாதியை வெளிப்படுத்த முடியாது. அவ்வாறு நீங்கள் கருதுனால் அதன் பெயர் மார்க்சிய திறனாய்வு அல்ல. மார்க்சியம் வெளிப்படுத்துகின்ற மூன்று தத்துவ கூறுகள் இவை அனைத்துமே போதுமானது. அதுவே மொத்தத்துவ கோட்பாடாகவும் சகல நிவாரணியாகவும் அமையும். //
தோழர் சண்முக சுந்தரம் (Pcp) விரிவாக மறுமொழி எழுதியுள்ளார். அது உங்கள் கவனத்துக்கு —
// தோழர் தியாகு அவர்களுக்கு மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வணக்கம்.
சண்முகசுந்தரத்தின்
பதில் :
தோழர் தியாகு அவர்களுக்கு மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் அதன் பொதுச் செயலாளர் என்கின்ற முறையில் சண்முகசுந்தரம் ஆகிய நானும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாகம் : 1
- உங்கள் பதிலின் முதல் பகுதியில் // மார்க்சியம் என்பது ஒரு கோட்பாடு கொள்கை அல்லது கருத்தியல் // என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
மார்க்சியம் என்பது இயற்கை இயங்கியல் மற்றும் வரலாற்று பொருள்முதல் வாதம் என்பதும் அது முரண் தருக்கப் பொருள் முதல் வாதம் என்பதையும் நாம் நன்கு உணர்ந்துள்ளோம்.
எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே என்றும் அறுதியிட்டு சொல்கிறார் கார்ல் மார்க்ஸ்.
எனவே மற்ற கருத்துகளை போல இதை கருத்தளவில் கருத்தாக பார்ப்பது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நீங்கள் // அது பாட்டாளி வர்க்கத்தின் கருத்துப் படைக்கலன். பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடன் என்ற கோணத்திலிருந்தே அது ஒவ்வொரு சிக்கலையும் அணுகுகிறது. சோசலிசம் நோக்கி உழைக்கும் மக்கள் அனைவரையும் அணிதிரட்டி வழி நடத்துவதுதான வரலாற்றுக் கடன்// என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
எனது பதில் : நீங்கள் குறிப்பிட்டுள்ள சோசலிசத்தை படைப்பதற்கு உழைக்கும் மக்களை ஒன்று திரட்ட வேண்டும்.
அப்படி ஒன்று திரட்ட சாதியத்தை முன் வைத்து ஒன்று திரட்ட முடியுமா?
தற்போது சாதிய அடிப்படையில் தொழிலாளர்கள் பிரிந்து தொழிற் சங்கங்களில் செயல்படுகின்றனர். இதை வர்க்கப் பார்வை என்று சொல்ல முடியுமா?
தலித்துகள் என்று அவர்களை ஒற்றுமை படுத்த முயற்சிக்கும் கட்சிகள் அந்த முயற்சியில் தோல்வியே கண்டுள்ளன. தலித் என வகைப்படுத்தும் சாதிகள் தனித்தனியாகவே ஆவர்த்தனம் செய்கின்றன.
பார்ப்பனிய எதிர்ப்பு என்பதை முன்வைத்து ஆளும்வர்க்க அரசை எதிர்த்து செயல்படாமல் சாதியத்திற்குள் மனித சிந்தனையை தள்ளி வர்க்க சிந்தனையை மழுங்கடித்த பெரியாரை கம்யூனிஸ்டுகள் எப்படி ஏற்க முடியும்.
// பாட்டாளி வர்க்கம் (வகுப்பு) முதலாளித்துவ வர்க்க அரசை ஆதரிக்காது என்று சொல்ல முடியாது. அது மார்க்சியம் வலியுறுத்தும் இயங்கியல் கண்ணோட்டத்திற்கு எதிரானதாகும் //. என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
நான் குறிப்பிட எத்தனித்தது ஆளும்வர்க்கத்தை ஆதரிக்கின்ற சித்தாந்தத்தின் பின் மார்க்சியம் செல்லுமா என்பது எனது வினா.
மார்க்சியம் தந்திரோபாய அடிப்படையில் ஆளும் வர்க்கத்தோடு குறிப்பிட்ட காலத்திற்கு உடன்படிக்கை செய்து கொள்ளும் அதே வேளையில் ஆளும் வர்க்க அரசை முறியடிப்பது என்ற திட்டத்தோடுதான் அதை மேற்கொள்ளும். நிரந்தர சரணாகதி அல்ல.
வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறே என்ற வார்த்தையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள முந்தய கால புரட்சிகளும் அதற்கான தத்துவங்களும் அடங்கும். அந்த புரட்சிகள் அனைத்தும் சுரண்டலை வேறு ஒரு வடிவத்திற்கு தள்ளியது. மார்க்சியம் சுரண்டலுக்கு முடிவு கட்டும் தத்துவமாக எழுந்தது என்பதே அதன் சிறப்பு.
இன்னும் தொடரும்……
பாகம்: 2
// மார்க்சியம் அனைத்து நோய்களுக்குமான அறுதி மருந்தன்று//.என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
எனது அறிவிற்கு எட்டியவரை மார்க்சியம் தேங்கிக்கிடக்கும் குட்டை நீர் அல்ல. ஓடிக்கொண்டிருக்கும் ஆற்று நீரைப்போன்றது.
அது இயங்கியலை அடிப்படையாகக் கொண்டதினால் வளர்ந்து கொண்டே இருக்கும் தத்துவம்.
கார்ல் மார்க்ஸ் எழுதிய எழுத்துக்களில் மார்க்சியம் அடங்கிவிட்டது என்று நினைப்பது சிறுபிள்ளைத் தனமானது.
// சமூகத்தை விளக்கிக் கொண்டிருந்த போது அதை விளங்கிக் கொள்ளவும் மாற்றி அமைக்கவும் மிகச் சிறந்த கருவி மார்க்சியம்//. என்று நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள்.
மார்க்சியம் உலக மக்களுக்கான விடுதலை தத்துவம் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம். அப்படி இருக்க உலகில் உள்ள நாடுகளின் கலாச்சாரம், பண்பாடு, சமூக உறவுகள் ஒன்றாக இருப்பதில்லை. மக்களுக்குள் மதங்களும் அதில் பிரிவுகளும் பல்வேறு வகைபட்டதாக இருக்கின்றன என்பதையும் நாம் அறிகிறோம். அந்தந்த நாட்டின் தன்மைக்கு ஏற்ப புரச்சூழலை பருண்மையாகப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் மார்க்சிய வழியில் மக்களை திரட்ட வேண்டும் என்பதே மார்க்சியத்தின் வழிகாட்டல்.
//சில சூழல்களில் இந்த மார்க்சியக் கருவி போதாமற் போவதுமுண்டு//.
மார்க்சியத்தை உணர்ந்தவராக கருதும் உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவா! ஆச்சர்யம் தான்.
மார்க்சியம் என்பது சமூக விஞ்ஞானம் என்பதை நீங்கள் ஏற்றிக் கொள்வீர்களானால் அது எப்படி போதாமை என்ற வார்த்தை உங்களிடமிருந்து வரும்? அப்படி வருகிறது என்றால் மார்க்சியத்தை தள்ளிவைத்து அதாவது தூரமாக வைத்து பார்ப்பதினால் வந்த வினை என்றே நான் காண்கிறேன்.
//இந்தியாவில் சாதிய அமைப்பை முழுமையாக விளங்கிக் கொள்ள மார்க்சியம் போதுமானதன்று//. என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.
இது உங்களின் மார்க்சிய ஆய்வில் கிடைத்த முடிவாக இருக்க வாய்ப்பே இல்லை.
மார்க்சியம் சொல்கிறது // மனிதனின் நிறம், மொழி, பழக்க வழக்கம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவைகள் தோன்றுவதற்கு அடிப்படை காரணிகளாக உள்ளவைகள், பூகோள அமைப்பு முறை தட்பவெப்ப நிலை மற்றும் அதை சார்ந்த உற்பத்தி முறை// என்பதை தீர்மானமாக வரையறை செய்கிறது. அப்படி இருக்க இந்தியா இதிலிருந்து வேறுபட்ட விதி விலக்கானது அல்ல என்பது தெளிவு. இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. //தொழிலாளி வர்க்கத்திற்கு நாடு இல்லை நகரம் இல்லை இனமில்லை மொழி இல்லை ஆகப்பெரும் சக்தியாக வளர்ந்தாக வேண்டும். இந்த உலகத்தையே தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தாக வேண்டும் அதுவரை அது தேசிய தன்மை கொண்டதாக இருக்கும் முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல//. என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். //உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் //என்பதும் சர்வதேச அகிலம் அமைத்ததும் எதற்காக?
சாதிய அமைப்பை புரிந்துகொள்ள அதாவது மார்க்சிய வழியில் எதிர்கொள்ள ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் போன்றவர்களின் பார்வைகளை புரிந்துகொள்ள வேண்டும்.
எனக்கு உங்களிடம் ஒரு பிரதானமான கேள்வி. ஒரு சமூகம் அதன் முன்னேற்றத்திற்கு தேவையானதை படைத்துக் கொள்ளும் என்பது விஞ்ஞானமானால் இங்கே சாதிய பிரிவுகளை உருவாக்கியது பார்ப்பனர்களின் சொந்த விருப்பத்திலிருந்தா அல்லது இங்கே நிலவி வந்த நிலப்பிரபுத்துவ முறையினை ஒழுங்கு படுத்தி சீராக செல்வதற்கான தேவையிலிருந்து பிறந்ததா?//
சரி. இந்தப் பார்வைகள் அறியப்பட்ட மார்க்சியத்துக்குப் பழக்கமானவைதான். அறியப்பட்ட மார்க்சியத்தின் கூட்டை உடைத்துக் கொண்டுதான் அறிவார்ந்த மார்க்சியம் மணக்க மணக்க மலர்கிறது. அடுத்தடுத்த இடுகைகளில் முகர்வோம்…
தொடர்கிறேன்…
தோழர் தியாகு
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்