
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (24)
மார்க்சியர்களுக்கு மார்க்சியமல்லாத மாந்தநேயச் சிந்தனையாளர்களையும் அவர்தம் சிந்தனைகளையும் மதிப்பீடு செய்வதில் அறிவுசார் துணிவு போலவே அறம்சார் பணிவும் வேண்டுமென நம்புகிறேன். மார்க்சும் எங்கெல்சும் தமக்கு முன்சென்றவையும் சமகாலத்தியவையுமான வரலாற்று நிகழ்வுகளையும் வரலாற்று மாந்தர்களையும் எவ்வாறு மதிப்பிட்டார்கள் என்பதற்கான சில சான்றுகளை இதுவரை எடுத்துக்காட்டியுள்ளேன்.
இந்த வகையில் மார்க்ஸ்-எங்கெல்சின் தலை மாணாக்கர் எனத்தக்க மா இலெனின் தம் காலத்திய சிந்தனையாளரும் எழுத்தாளருமான லியோ தோல்ஸ்தோய் (டால்ஸ்டாய்) எனும் உருசிய (ரஷ்ய) பெருமகனை எவ்வாறு மதிப்பிட்டார் என்பது கருத்துக்குரிய செய்தியாக இருக்கும்.
உருசிய இலக்கியப் படைப்புகளில் தமிழ்நாட்டுப் படிப்பாளர்கள் பெரிதும் விரும்பக் கூடிய இரு நூல்கள்: 1) போரும் அமைதியும், 2) புத்துயிர்ப்பு. தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ள இந்த இரு நூல்களையும் எழுதியவர் லியோ தோல்ஸ்தோய் (1828-1910). அன்னா கரீனா உட்பட மேலும் பல நூல்களையும் அவர் எழுதினார். காந்தியாருக்கு தோல்ஸ்தோயிடம் மிகுந்த ஈடுபாடு இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் காந்தியாரும் நண்பர்களும் “தோல்ஸ்தோய் பண்ணை” நடத்தி வந்தனர். இருவருக்குமிடையிலான கடிதத் தொடர்பு புகழ்மிக்கது. தோல்ஸ்தோய் திருக்குறள் ஜெர்மன் மொழிபெயர்ப்பைப் படித்தார் என்றும், திருக்குறளிடமிருந்து அகிம்சைக் கொள்கைக்கு ஊக்கம் பெற்றதாக காந்திக்கு எழுதினார் என்றும் ஒரு செய்தி உண்டு; ஆனால் இதற்கு ஏற்புடைத்த சான்று ஏதும் கிடைக்கவில்லை.
லியோ தோல்ஸ்தோய் பற்றி மா இலெனின் எழுதிய இரு கட்டுரைகள் இலெனின் தொகுப்பு நூல்களில் இடம்பெற்றுள்ளன. ”உருசியப் புரட்சியின் நிலைக் கண்ணாடியாக லியோ தோல்ஸ்தோய்” என்பது 1908ஆம் ஆண்டு புரொலிடரி இதழில் இலெனின் எழுதியது. அதன் முதல் வாக்கியமே இதுதான்:
“அந்தப் பெருங்கலைஞர் இந்தப் புரட்சியைப் புரிந்துகொள்ளத் தவறி விட்டார் என்பதைக் கூறத் தேவையில்லை, அவர் அதிலிருந்து விலகி நின்றார் என்பதையும் கூறத் தேவையில்லை, அவரை இந்தப் புரட்சியுடன் அடையாளப்படுத்துவது எடுத்த எடுப்பில் வேடிக்கையும் செயற்கையுமாகத் தோன்றலாம்.”
”To identify the great artist with the revolution which he has obviously failed to understand, and from which he obviously stands aloof, may at first sight seem strange and artificial.”
புரட்சியைப் புரிந்து கொள்ளத் தவறிய, புரட்சியிலிருந்து விலகி நின்ற ஒருவரைப் புரட்சியின் நிலைக் கண்ணாடி என்று எப்படிச் சொல்லலாம்? நிலைமையைச் சரியாகக் காட்டினால்தான் அதைக் கண்ணாடி என்று சொல்லக் கூடும். இப்படி இருக்க தோல்ஸ்தோயை உருசியப் புரட்சியின் கண்ணாடி என்று சொல்வது எப்படி?
இலெனின்: “நமது புரட்சி மிக மிகச் சிக்கலான ஒன்று. நேராக இந்தப் புரட்சியைச் செய்கிறவர்கள், அதில் பங்கேற்கிறவர்களில் பற்பல குமுக ஆற்றல்கள் (சமூக சக்திகள்) உள்ளனர், இவர்களும் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளவில்லை, நிகழ்ச்சிப் போக்கில் தங்களை எதிர்ப்படும் மெய்யான வரலாற்றுக் கடமைகளிலிருந்து விலகி நிற்கின்றனர் என்பதும் கண்கூடு. உண்மையிலேயே மாபெரும் கலைஞரான ஒருவர் நம்முன் நிற்கும் போது, அவர் புரட்சியின் அடிப்படைக் கூறுகளில் சிலவற்றையாவது தமது படைப்பில் எதிரொளித்திருக்க வேண்டும்.”
தோல்ஸ்தோயின் 80ஆம் பிறந்த நாளை ஒட்டி அவரது நாட்டுப்பற்று, இறைக் கொள்கை குறித்தெல்லாம் எழுதிக் குவிக்கப்பட்டவற்றைப் புறந்தள்ளி விட்டு, நடப்பிலுள்ள குமுக ஒழுங்கை (சமூக அமைப்பை) அவர் குற்றஞ்சொல்கிறார் என்பதை எடுத்துக் காட்டி இலெனின் கேட்கிறார்:
” ”தோல்ஸ்தோயியத்தின்” (தோல்ஸ்தோய் கொள்கையின்) அப்பட்டமான முரண்பாடுகளுக்கு என்ன காரணம்? இந்த முரண்பாடுகள் வெளியிடும் நம் புரட்சியின் குறைபாடுகளும் வலுவின்மைகளும் என்ன?”
“what are the glaring contradictions of “Tolstoyism” due to, and what shortcomings and weaknesses of our revolution do they express?”
தோல்ஸ்தோயின் படைப்புகளிலும் பார்வைகளிலும் அப்பட்டமான முரண்பாடுகள் உள்ளன. அந்த மாபெரும் கலைஞர், மாமேதை உருசிய வாழ்க்கையை ஒப்பிட்டுச் சொல்ல முடியாத எழுத்தோவியங்களாகத் தீட்டியிருப்பதோடு, உலக இலக்கியத்துக்கு முதல் தரமான கொடைகளும் வழங்கியுள்ளார். மறுபுறம் கிறித்துநாதரிடம் பித்துக் கொண்ட நிலக்கிழாராகவும் விளங்குகிறார். ஒருபுறம் சமூகப் பொய்மையையும் போலித்தனத்தையும் நேர்மையாகவும் உண்மையாகவும் சாடுகிறார். மறுபுறம் உருசியப் படைப்பாளிக்கே உரிய முறையில் தன் குற்றங்குறைகள் பற்றிப் புலம்புகின்றார். ஒருபுறம் முதலாண்மைச் சுரண்டலை ஈவிரக்கமின்றிச் சாடுகிறார், அரசின் கொடுமைகளையும், நீதிமன்றக் கூத்துகளையும், அரசாட்சியையும் அம்பலப்படுத்துகிறார், செல்வக் குவிப்பு, நாகரிக சாதனைகளுக்கும் உழைக்கும் பெருந்திரளான மக்களிடையே வறுமை, சீரழிவு, துயரத்தின் பெருக்கத்துக்கும் இடையிலான ஆழ்ந்த முரண்பாடுகளைத் தோலுரிக்கிறார். மறுபுறம் வன்முறையால் “தீமையை எதிர்க்காதிருப்பாயாக” என்று தாழ்ந்து பணிந்திட போதிக்கும் உதவாக்கரையான அறிவுரை.
தோல்ஸ்தோய் சொல்லும் உண்மை:
“அன்னையே உருசியா!
நீ எழை என்றாலும் வளமானவள்,
நீ வலிமை மிக்கவள் என்றாலும் வக்கற்றவள்.”
இந்த முரண்பாடுகள் காரணமாக, தோல்ஸ்தோயால் தொழிலாளர் வகுப்பின் இயக்கத்தையோ குமுகியத்துக்கான போராட்டம் அல்லது உருசியப் புரட்சியில் அதன் வகிபாகத்தையோ புரிந்து கொள்ள இயலாமற்போயிற்று என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் தோல்ஸ்தோயின் பார்வைகளில் காணப்படும் முரண்பாடுகள் தற்செயலானவை அல்ல என்கிறார் இலெனின்:
“இந்த முரண்பாடுகள் 19ஆம் நூற்றாண்டின் கடைசி மூன்றாம் பகுதியில் உருசிய வாழ்க்கையின் முரண்பட்ட நிலமைகளையே எதிரொளிக்கின்றன.”
உருசிய கிராமப்புறத்தில் நிலவிய தந்தைவழிச் சமூகம் அண்மையில்தான் பண்ணையடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தது. தோலை உரிக்கவும் கொள்ளையடிக்கவும் அது அப்படியே முதலாளரிடமும் வரிதண்டுநரிடமும் ஒப்படைக்கப்பட்டு விட்டது. உழவர் பொருளியல், உழவர் வாழ்க்கையின் தொன்மை அடித்தளங்கள், உண்மையில் நூற்றாண்டுக் கணக்கில் நிலைத்து நின்ற அடித்தளங்கள் அவசர அவசரமாக அடித்து நொறுக்கப்பட்டன.
இலெனின் சொல்கிறார்:
“தோல்ஸ்தோயின் பார்வை முரண்பாடுகளை நிகழ்காலத் தொழிலாளர் வகுப்பு இயக்கம், நிகழ்காலக் குமுகியம் (socialism) ஆகியவற்றின் கோணத்திலிருந்து கணிக்கலாகாது (இப்படிக் கணிப்பதும் தேவை என்றாலும் போதுமானதன்று), முன்னேறி வரும் முதலாண்மைக்கு எதிர்ப்பு, நிலப் பறிப்புக்கு ஆளாகி அழிந்து வரும் பெருந்திரளான மக்களின் எதிர்ப்பு என்ற கோணத்திலிருந்துதான் கணிக்க வேண்டும். இந்த எதிர்ப்பு தந்தைவழிச் சமூகம் நிலவிய உருசிய கிராமப் புறத்திலிருந்து எழ வேண்டியிருந்தது. மாந்த குல விடுதலைக்குப் புதிய மூலிகைகளைக் கண்டுபிடித்த வகையில் தோல்ஸ்தோயின் பார்வைகள் அபத்தமானவை. உருசிய, அயலக ’தோல்ஸ்தோயர்’கள் அவரது கொள்கையின் மிக நலிந்த பக்கத்தை வறட்டு வாய்பாடாக்கவே முற்பட்டுள்ளார்கள்.”
[காந்தியாரையும் ஒரு வகையில் இந்த அயலக ‘தோல்ஸ்தோயர்களின்’ வரிசையில் சேர்க்கலாம் என நினைக்கிறேன்.- காந்தியாரின் ஒரு பக்கமாகிய மெய்யியல் அபத்தங்களுக்கும் இந்த விளக்கம் பயன்படக் கூடும். – தியாகு.]
இலெனின் தொடர்கிறார்:
“உருசியாவில் முதலியப் புரட்சி நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோடிக்கணக்கான உருசிய உழவர்களிடையே எழுந்த எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் தோல்ஸ்தோய் குரல் கொடுப்பதால் சிறப்புடையவர் ஆகிறார்.”
தோல்ஸ்தோயின் பார்வை முரண்பாடுகள் என்பவை நமது புரட்சியில் உழவர் பெருங்குடி மக்களின் வரலாற்று வகிபாகம் நிறைவேற வேண்டிய அந்த முரண்பட்ட நிலைமைகளைக் காட்டும் நிலைக்கண்ணாடியே ஆகும் என்கிறார் இலெனின்.
தோல்ஸ்தோயை மா இலெனின் மதிப்பீடு செய்யும் முறையை விளங்கிக் கொள்வதும், கற்று உள்வாங்கிக் கொள்வதும், நம் ஆய்வுகளில் ஆள்வதும் சற்றே கடினமாக இருக்கக் கூடும். ஆனால் மார்க்சியத்துக்கு வாழ்க்கைப்பட்ட பின் இதற்கெல்லாம் அஞ்சுவதற்கில்லை. இயங்கியல் பொருண்மிய ஆய்வுமுறை (the Dialectical Materialist methodology) கடினமானது, ஆனால் அதுவே சரியானது.
தொடர்வேன்…
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்