திமுகவில் அதிரடி மாற்றம்! கட்சியை சீரமைக்க உயர்மட்ட குழு அமைத்தார் மு.க.ஸ்டாலின்!
Tamilnadu

திமுகவில் அதிரடி மாற்றம்! கட்சியை சீரமைக்க உயர்மட்ட குழு அமைத்தார் மு.க.ஸ்டாலின்!

Jul 1, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவை அடிமட்டத்திலிருந்து முழுமையாக மாற்றியமைக்கக் கட்சித் தலைமை தற்போது தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, திமுகவை முழுமையாக மறுசீரமைப்பு செய்யவும் மறுகட்டமைக்கவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் 10 பேர் கொண்ட பிரத்யேக ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார்.

6 லட்சம் தொண்டர்களின் கருத்துக்கள்; ஏ.ஐ (AI) தொழில்நுட்பம் மூலம் ஆய்வு!

தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே தொண்டர்களின் உண்மையான கருத்துக்களைக் கேட்க 19 ஆய்வுக் குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வழங்கிய அறிக்கைகளை மு.க.ஸ்டாலின் தினந்தோறும் படித்து விரிவான குறிப்புகளை எடுத்து வருகிறார்.

“இதுதவிர ‘உடன்பிறப்பின் குரல்’ என்ற இணையதளம் வழியாக கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஆன்லைன் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்தத் தரவுகள் அனைத்தும் மனித தலையீடின்றி ஏ.ஐ (Artificial Intelligence) தொழில்நுட்பம் வழியாக விரிவான அறிக்கையாகத் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.”

தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்ட 10 முக்கிய பிரமுகர்கள் கொண்ட குழு!

கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான மாற்றங்களைப் பரிந்துரைக்க மு.க.ஸ்டாலினால் புதிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அர. சக்கரபாணி, எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் முக்கிய உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

மேலும் தமிழரசி இரவிக்குமார், எம்.எம்.அப்துல்லா, இ. பரந்தாமன், ச. முரசொலி எம்.பி., டாக்டர். எழிலன், எஸ்.கே.பி. கருணா ஆகியோரும் இதில் உள்ளனர்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இறுதிப் பரிந்துரை; அடுத்த 100 ஆண்டுகளுக்கான திமுகவின் மெகா பிளான்!

இக்குழுவானது மாவட்டங்களின் மறுவரையறை, சார்பு அணிகளின் மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் பணிக்குழுக்களில் செய்ய வேண்டிய சீரமைப்புகள் குறித்துப் பரிந்துரைக்கும்.

தேர்தல் பணிகளைச் செய்வதற்கான நிரந்தர அமைப்பு மற்றும் தலைமைக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கும் ஒரு ‘திங்க் டேங்க்’ (Think Tank) அமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும் இக்குழு தயாரிக்கும்.

இந்த உயர்மட்டக் குழு தனது இறுதிப் பரிந்துரை அறிக்கையை வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் திமுக தலைவரிடம் முறைப்படி சமர்ப்பிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இப்பரிந்துரைகள் அனைத்தும் கட்சியின் உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அடுத்த 100 ஆண்டுகளுக்கான திமுகவின் புதிய கட்டமைப்பு இறுதி செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *