மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
Opinion

மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

Feb 7, 2025

1883 மார்ச்சு 14ஆம் நாள் பிற்பகல் 3 அடிக்கக் கால் மணி நேரம் இருக்க… நம் காலத்தின் ஆகப் பெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் – கார்ல் மார்க்சின் மறைவை இப்படித்தான் ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் வண்ணித்தார். மூன்று நாள் கழித்து மார்ச்சு 17ஆம் நாள் மார்க்சின் ஹைகேட் கல்லறை அருகே எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் முன்பு நான் எடுத்துக் காட்டி வரலாற்று இயங்கியல் பொருண்மியத்தின் மையக் கோட்பாட்டை விளக்கினேன்.

மார்க்ஸ் மறைந்த பின்… அவரது படிப்பறையில் குவிந்து கிடந்த நூல்களையும் குறிப்பேடுகளையும் எங்கெல்சும் மார்க்சின் அன்பர்களும் தேடிப் பார்த்த போது கிடைத்த பலவற்றில் ஒன்று ”தொல் குமுகம்” (Ancient Society) என்ற நூலைச் சுருக்கி மார்க்ஸ் எழுதி வைத்திருந்த ஒரு குறிப்பேடு. 1877இல் இலண்டனில் வெளியிடப்பட்ட இந்த நூலை எழுதியவர் லுயி ஹென்றி மார்கன் எனும் முற்போக்கு அமெரிக்க அறிஞர். மார்க்சின் சுருக்கவுரை 1880-81 காலத்தில் எழுதப்பட்டிருந்தது. மார்கன் பற்றிய பல குறிப்புகளையும் மற்றவர்கள் எழுதிய சில உரைகளையும் மார்க்ஸ் எழுதி வைத்திருந்தார்.

வியக்கத்தக்க ஒரு செய்தி என்னவென்றால், மார்க்ஸ் மார்கனின் நூலை அறிந்திருந்தாரே தவிர மார்கன் மார்க்சின் பணியை அறிந்திருக்கவில்லை. ஆனால் மாந்தக் குலத்தின் தொல் வரலாற்றுப் பயணத் தடம் குறித்து இருவரும் ஏறக்குறைய ஒரே விதமான முடிவுகளை அடைந்திருந்தனர்.

மார்கன் நூல் பற்றிய மார்க்சின் சுருக்கவுரையைப் படித்து, மார்கன் திரட்டிய சில தரவுகளையும் பயன்படுத்தி, தாமே கற்ற கிரேக்க, ரோமானிய, பழைய அயர்லாந்திய, தொல் ஜெர்மானிய வரலாற்றுச் செய்திகளையும் தொகுத்து எங்கெல்ஸ் இரண்டே மாதத்தில் (1884 மார்ச்சு-மே) எழுதிய நூல்தான் ’குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்கிற அறிவுப் பெட்டகம். புதிதாக வெளிப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவர் மேலும் செழுமை செய்து 1890இல் புதிய பதிப்பு வெளியிட்டார்.

“வரலாறு என்னும் இருட்டறையில் தடுமாறிக் கொண்டிருந்தேன், மார்க்சிய ஒளி எனக்கு வழிகாட்டியது” என்று பண்டிதர் தன் மகளுக்கு எழுதுமுன் எங்கெல்சின் இந்த நூலைப் படித்தாரா? யானறியேன்.

நாம் இன்று வாழும் ஏடறிந்த வரலாற்றுக் காலத்துக்கு முன் இலட்சக் கணக்கான ஆண்டுகள் மனித குலம் கடந்து வந்த காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் எனப்படும். அந்தக் காலத்தைப் பயில விரும்பும் எவரும் இந்த எங்கெல்ஸ் நூலைப் படித்துக் கற்க வேண்டும்.

குமுக அறிவியல் ஆய்வுகள் நீண்ட பல்லாண்டுகளாக நடைபெற்று வந்தாலும், 1860க்குப் பிறகுதான் குடும்ப முறைகள், மண முறைகள் பற்றிய வரலாற்று ஆய்வு தொடங்கியது. இந்த ஆய்வுகளுக்கு மார்கனின் நூலும் அதனை அடியொற்றிய எங்கெல்ஸ் நூலும் பெரும் பாய்ச்சல் தந்தன. 1860க்கு முன் டோரா வேதம் எனப்படும் மோசேயின் ஐந்து புத்தகங்கள் தவிர குடும்ப வரலாற்றுக்கு வேறு சான்றே இல்லை.

1861ஆம் ஆண்டு பச்சோஃபென் எழுதிய ”தாயுரிமை” என்ற நூல் வெளிவந்ததிலிருந்து ஏடறிந்த குடும்ப வரலாறு தொடங்குகிறது. இந்த நூலில் அதன் ஆசிரியர் பின்வரும் கருத்துகளை முன்வைத்தார்:

(1) ஆதியில் மாந்தர்கள் வரைமுறையற்ற கலவி நிலையில் வாழ்ந்து வந்தனர்.

(2) வரைமுறையற்ற கலவி வாழ்க்கையில் தகப்பன் யாரென்று சற்றும் உறுதி செய்து கொள்ள வழியில்லை. ஆகவே பெண் வழியாக மட்டுமே கால்வழி காண முடியும். இதற்குத்தான் தாயுரிமை என்று பெயர். பண்டைக் கால குமுகாயங்கள் அனைத்துமே ஆதியில் இப்படித்தான் வாழ்ந்தன.

(3) அன்னையர் என்ற முறையில் பெண்கள்தாம் இளைய தலைமுறைக்கு உறுதியாக அறியப்பட்ட பெற்றோர் ஆக முடியும் என்பதால் பெண்கள் உயர் மதிப்பும் மாண்பும் மிக்க நிலை வகித்தார்கள். இந்த அடித்தளத்தின் மீது முறையான பெண்ணாட்சி அமைந்தது என்பது பச்சோஃபென் பார்வை. (மீனாட்சி, காமாட்சி எல்லாம் இந்தப் பெண்ணாட்சியின் குறியீடுகளாக இருக்கலாம்)

(4) இந்த நிலை கடந்து… பெண்ணை ஒருவனுக்கே தனித்துரியவளாகச் சொந்தமாக்கும் ஒருதார முறைக்கு மாறுவது ஆதிச் சமய நெறியை மீறுவதாகக் கருதப்பட்டது. (அதாவது அந்த ஒரு பெண் மீது மற்ற ஆண்களுக்குள்ள உரிமையை மீறுவதாம்! )

(1) That originally man lived in a state of sexual promiscuity, to describe which Bachofen uses the mistaken term “hetaerism”;
(2) that such promiscuity excludes any certainty of paternity, and that descent could therefore be reckoned only in the female line, according to mother-right, and that this was originally the case amongst all the peoples of antiquity;
(3) that since women, as mothers, were the only parents of the younger generation that were known with certainty, they held a position of such high respect and honor that it became the foundation, in Bachofen’s conception, of a regular rule of women (gynaecocracy);
(4) that the transition to monogamy, where the woman belonged to one man exclusively, involved a violation of a primitive religious law (that is, actually a violation of the traditional right of the other men to this woman).
இந்தச் செய்திகளைப் பெரியார் ”உறவு முறை”யில் வியப்புடன் குறிப்பிட்ட செய்திகளுடன் ஒப்புநோக்குங்கள். மனிதர்கள் இந்தச் செய்திகளிலிருந்து ”சமயோசிதமாக” எடுக்க வேண்டிய முடிவுகளை அவர் குறிப்பிட்டாரே தவிர ஒரு தனிமனிதன் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று அறிவுறுத்த முற்படவே இல்லை என்று விளங்கிக் கொள்ளலாம்.

உலகத்துக்கே இது பொருந்தினாலும் தமிழர்களின் அறம் என்றைக்குமே ஒருவனுக்கு ஒருத்திதான் என்று சொல்லி வரலாற்று உண்மைகளைத் திரித்து தன்னாறுதல் தேடும் இனவாதிகள் ஏதோ ஒரு மாய உலகில் வாழ விரும்புகிறார்கள். இந்த மாயத் திரையை பெரியார் தமக்கே உரிய முறையில் கிழித்து எறிவதால் அவர் மீது அவதூறு பொழிகின்றார்கள்.

வரைமுறையற்ற கலவி, பலதார மணம், பலபுருட மணம், குழு மணம்… இவற்றில் எதுவும் தமிழறத்தில் வராது, என்றுமே தமிழர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்றே வாழ்ந்தவர்கள் என்று நிலைநாட்ட விரும்பும் இனவாதிகள் ஒன்றைக் கேட்டுச் சொல்லட்டும்:

“தமிழறம், தமிழ் வீரம் காத்த மாமன்னன் இராச இராச சோழனுக்கு எத்தனை மனைவிகள்?”

தமிழின உரிமைகளின் அடிப்படையில் வளர்க்க வேண்டிய தமிழ்த் தேசிய உணர்வுக்கு மாறாக வெறும் இனவாதப் போதையூட்ட முற்பட்டுள்ள சீமான் வகையறாக்கள் இந்தப் போதையைத் அதிர்ச்சி கொடுத்துத் தெளிவிக்கும் பெரியாரின் சிந்தனைகளைக் கொச்சைப்படுத்தி அவதூறு செய்ய முற்பட்டுள்ளார்கள் – அசட்டுத் துணிச்சலுடன்!

படம்: லுயி ஹென்றி மார்கன்

தொடர்கிறேன்…

தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *