மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்
Opinion

மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

Jan 30, 2025

விடுதலை 11.05.1953 இதழின் நான்கு பக்கங்களையும் படப்படி எடுத்து அனுப்பியுள்ள அன்பர்களுக்கு நன்றி! செந்தில் மள்ளர் தனது நூலில் வேறு விடுதலை இதழ்களை எடுத்துக் காட்டியிருந்தால் அதையும் சரிபார்க்க வேண்டும். பெரியார் குறித்து அவர் என்ன எழுதியிருந்தாலும், அதற்கு என்ன சான்று காட்டியிருந்தாலும் பொதுவெளியில் முன்வைப்போம். செந்தில் மள்ளரோ வேறு எந்த எழுத்தாளருமோ பெரியாரை எவ்வளவு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் குற்றாய்வு செய்யட்டும். ஆனால் உள்நோக்கத்துடன் பொய்ச் சான்று காட்டினால் பேசாமல் கடந்து போக முடியாது.

எனக்கு அந்த மேற்கோள் இடம் பெற்றுள்ள செந்தில் மள்ளரின் நூல் முழுமையாகத் தேவை. செந்தில் மள்ளரோ அவரை நம்பி எனக்கு அறைகூவல் விடுத்த ’தமிழ் மன்றம்’ என்கிற முகநூல் பக்கத்துக்கு உரியவரோ என் குறியில்லை. செந்தில் மள்ளர் எடுத்துக் காட்டும் அந்தப் பெரியார் மேற்கோளை எழுத்துப் பிசகாமல் எடுத்துக் காட்டி விட்டு இப்போது அதற்குப் பொறுப்பேற்கும் அறிவு நாணயம் இல்லாமல் நாட்டுடைமைக் கோரிக்கைக்குள் பதுங்கியிருக்கும் சீமான் எப்படிப்பட்டவராக இருப்பார்? என்றுதான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

பெரியாரின் கருத்துகள் மீது விவாதிக்கலாம். அந்தக் கருத்துகளில் குறையே இல்லை என்பதன்று என் பார்வை. ஆனால் இந்த விவாதத்துக்கு முன் அவரைப் பற்றிய அவதூறுக்கு இறுதியாகத் தீர்வு கண்டாக வேண்டும்.

சீமானே தான் சொன்ன பெரியார் மேற்கோளுக்கு சான்று இல்லை என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிக்கட்டும். அல்லது அவருக்காகப் பரிந்து பேசும் நண்பர்கள் சீமான் பேச்சு (குறுப்பிட்ட பெரியார் பேச்சைப் பொறுத்த வரைக்குமாவது) அவதூறுதான் என்பதை ஒப்புக்கொண்டு சீமானுக்காக வருத்தம் தெரிவிக்கட்டும்.

சீமான் தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கைத் தாரகையாகவே இருக்கட்டும். தலைவர் பிராபகரனின் முத்திரை பெற்றவராகவே இருக்கட்டும். ஆனால் பெரியார் சொல்லாத ஒன்றை இட்டுக்கட்டி அவதூறு செய்தால் அதனை அவருடைய தம்பிகளே கண்டிக்க முன்வர வேண்டும். இதை செய்து விட்டு பெரியார் பற்றியும் திராவிடம் பற்றியும் ஆயிரம் சொல்லுங்கள். கதைப்போம்.

பெரியாரை விடவும் உண்மை பெரிது என்று நம்புகிறேன்.

சீமானை விடவும் உண்மை பெரிது என்று நீங்கள் நம்பவில்லையா?

சீமான் பெரியார் பற்றிய தன் பேச்சுக்கு எள்முனையளவு சான்றும் காட்டாமல் தொடர்ந்து விவாதத்தைத் திசை திருப்பிக் கொண்டிருக்கும் போது சீமானின் பேச்சுக்கு முட்டுக் கொடுக்க முன்வந்த அன்பர்கள் காட்டியுள்ள மற்றொரு சான்று என்ன? அடுத்துக் காண்போம்.

இதற்கிடையில் செந்தில் மள்ளரின் புத்தகத் தலைப்பு “இனப்பகைவர் பெரியார்” என்று சில நண்பர்கள் சொல்கின்றார்கள். சரிதானா? அந்தப் புத்தகம் உடனே தேவை.

அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கத்தை படம் பிடித்துப் பதிவிட்ட ”தமிழ் மன்றம்” முகநூல்காரரிடம் அந்தப் புத்தகம் இருக்கும். அவரே அனுப்பியுதவலாம். அல்லது செந்தில் மள்ளரே கூட அனுப்பியுதவலாம். அல்லது உங்களில் யாராவது?

விரைவில்…

தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *